நாம் யார் பக்கம்?
இயேசு யூதர்களுக்கு மத்தியில் போதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய போதனையில் காணப்பட்ட இரண்டு செய்திகள், யூதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல் செய்தி: இயேசு கடவுளிடமிருந்து வந்ததாகச் சொன்னது. இரண்டாவது செய்தி: யூதர்களுக்கு கடவுள் யார்? என்பது தெரியவில்லை என்பது. இயேசுவின் இந்த இரண்டு செய்திகளுமே, யூதர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, எரிச்சலையும், கோபத்தையும் கொண்டு வந்தது. எதற்காக யூதர்கள் கோபப்பட வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
யூதர்கள் தாங்கள் மட்டும் தான், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தாங்கள் மட்டும் தான் கடவுளை அறிந்தவர்கள் என்ற, கர்வம் கொண்டிருந்தார்கள். பிற இனத்தவர்களை மிகவும் இழிவாகக் கருதினார்கள். அப்படிப்பட்ட யூதர்களைப்பார்த்து, கடவுளைப்பற்றி ஒன்றும் தெரியாது, என்று சொன்னால் நிச்சயம் அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இயேசுவின் இந்த போதனை, அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு, அவருடைய எதிரிகளுக்கு மிகவும் எளிதாய்ப் போனது. இதுநாள் வரை ஓய்வுநாள் ஒழுங்குகளை மீறுகிறவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இப்போது, கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல்லைப் பேசுகிறவர் என்கிற குற்றச்சாட்டும் அவா் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இயேசு உண்மைக்காக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.
இயேசுவுக்கு எதிராக, இயேசுவுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இயேசுவின் பக்கம் பலர் நின்றனர். அவருக்கு எதிராகவும் இருந்தனர். நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம்? இயேசுவின் சார்பில் நிற்கப் போகிறோமா? அல்லது அவருக்கு எதிராக நிற்கப் போகிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்