நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருப்போம்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர் ,சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

பிரியமானவர்களே! விண்ணையும், மண்ணையும் படைத்த நம்முடைய கடவுள் அதை ஆள்வதற்கு மனுஷனையும் படைத்து இந்த பூமி முழுதும் நிரம்பும்படி செய்து அவர்களை இந்த பூமியை ஆண்டுக்கொள்ளும் படியும் செய்து,நம் அனைவருக்கும் ஒரே கடவுளாய் இருந்து நம்மை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக வரும் நம்முடைய முன்னோர்களின் உடன்படிக்கையை காத்து நடந்து கடவுளின் திருமுன் குற்றமற்றவர்களாய் நிற்கும்படி இந்த நாளில் உறுதி எடுத்து நம்முடைய சகோதரர் சகோதரிகளுக்கு துரோகம் ஏதும் செய்துவிடாதபடி ஆண்டவரின் முன் நிற்க நம்மை தகுதிப்படுத்தி,ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய் முன்னே தூரமாய் இருந்தவர்களும் இப்போது அவரின் பிள்ளைகளாய் ஓன்று கூடி அவர்முன் நம்மை தாழ்த்தி அவர் பாதம் பணிந்திடுவோம்.

நாம் யாவரும் ஆண்டவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து அவர் நம்மோடு செய்துக்கொண்ட உடன்படிக்கை, வாழ்வும்அமைதியும்,தரும் உடன்படிக்கை யாவையும் காத்து நடக்கவே நமக்கு அறிவை அளித்திருக்கிறார்.மெய்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும், நேர்மையோடும் நடந்து கொண்டான். நெறிகேட்டில் இருந்து பலரைத் திருப்பிக் கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தை கேட்ட மக்கள் அவனை நாட வேண்டும். என்று மலாக்கி 2:5,6,7 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.

நாமும் கூட ஆண்டவரின் வார்த்தை ஒவ்வொன்றையும் கூர்ந்து வாசித்து தியானித்து அதன்படியே வாழ நம்மை அர்ப்பணிப்போம். நம் அனைவருக்கும் தந்தை ஒருவறன்ரோ?நம்மை படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்கின்றோம்?மலாக்கி 2:10. நமக்குள் இருக்கும் பொறாமை,நம்மை அப்படி செய்ய வைக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் அன்பால் இணைந்து கடவுளுக்கு பயந்து நடந்தோமானால் நம்மேல் நீதியின் சூரியனை உதிக்கச் செய்வார். அவர் செட்டைகளின் கீழ் நம்மை எல்லாத் தீங்குக்கும் மறைத்து நமது வாழ்வில் ஆரோக்கியம் கிடைக்க உதவுவார். கொழுத்த கன்றுகளைப்போல் வளரும்படி செய்வார்.

அப்பொழுது ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொள்வர். அதை ஆண்டவரும் உன்னிப்பாக கேட்பார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைத்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஓன்று அவர் திருமுன் எழுதப்படும். அந்நாளில் நாம் அவரின் தனிப்பெரும் சொத்தாக விளங்குவோம். இந்த தவக்காலத்திலும் நாம் ஆண்டவருக்கென்று எப்படி வாழ்கிறோம் என்று நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து அவர் கட்டளைப்படி வாழ்ந்து அவர்முன் குற்றமற்றவர்களாய் இருக்க முடிவு செய்து அவரின் திருமுன் பணிவோம்.துரோகத்தை வெறுத்து அன்போடு வாழ்ந்து மன்னிக்கும் குணத்தை நமக்குள் வளர்த்துக்கொள்வோம். அப்பொழுது நம்முடைய ஆண்டவர் நம்மேல் மிகவும் பிரியம் வைத்து நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்து நம்மை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்துவார்.

ஜெபம்.

அன்பின் தெய்வமே,அடைக்கலமானவரே உமக்கு நன்றி சொல்கிறோம், இதோ ஒரே கடவுளாய் இருந்து எங்களை உருவாக்கி இந்த பூமி முழுவதையும் நிரம்பும்படி செய்து உமது கட்டளைகளை எங்களுக்கு அளித்து அதன்படி வாழும்படிக்கு எங்களுக்கு போதித்து காத்து வருகிறீர். தகப்பனே நாங்களும் உமது வார்த்தை ஒவ்வொன்றுக்கும் கீழ்படிந்து நடந்து எங்கள் சகோதரர், சகோதரிகளுக்கு துரோகம் செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். உம்மைப்போல் இதயத்தை தாரும்.உம்மைப்போல் மன்னிக்கும் குணத்தை தந்தருளும். அன்போடு வாழ கற்றுத்தாரும்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.