”நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்…” (மத்தேயு 22:4)
கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ”திருமண விருந்து உவமை” ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ”திருமண ஆடையின்றி வந்தவர்” (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.
கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.
மன்றாட்டு : இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.
~ அருட்திரு பவுல் லியோன் வறுவேல்