நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்த இயேசு, தமது நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடங்குகிறார். “கற்பித்தார், நற்செய்தியைப் பறைசாற்றினார், நோய்நொடிகளைக் குணமாக்கினார்”.
இந்த நற்செய்திப் பகுதியுடன் தொடர்பு கொண்டதாக அமைகிறது இன்றைய திருப்பாடல். அரசத் திருப்பாடல்களுள் ஒன்றான திபா 2 “கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அதன் 8ஆம் வசனம் “பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்” என்பதே இன்றைய பல்லவி. அதன் தொடர்ச்சியாக “பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்” என்றும் வாசிக்கிறோம்.
இஸ்ரயேலரின் அரசர்களில் ஒருவரைப் பற்றிப் பாடப்பட்ட இந்தத் திருப்பாடல் இப்போது மெசியாவாம் இயேசுவின்மீது ஏற்றிப் பாடப்படுகிறது. குறிப்பாக, “நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” (2:7) என்னும் வரிகள் இயேசுவையே குறிக்கின்றன. திருத்தூதர் பணிகள் நூலில் அந்தியோக்கு நகரின் தொழுகைக்கூடத்தில் பவுல் ஆற்றிய மறையுரையில் “இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில் “நீரே என் மகன். இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது” (திப 13:32-33) என்று விளக்குகிறார்.
இதே கருத்தை எபிரேயர் திருமடலில் 1:5 மற்றும் 5:5 வசனங்களில் பார்க்கிறோம். “கிறிஸ்து தலைமைக்குருவாகத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்” (எபி 5:5) என்று வாசிக்கிறோம்.
இயேசுவைப் பெருமைப்படுத்தும் இந்தத் திருப்பாடலை உற்சாகமாகப் பாடி அவரை வழிபடுவோம்.
மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தந்தையால் மேன்மைப்படுத்தப்பட்ட உம்மை நாங்களும் வணங்கிப் பெருமைப்படுத்துகிறோம். உமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் நாங்களும் பங்குகொள்ள அருள்தாரும், ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா