”நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”
“நீங்கள் என்னைத்தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்”. இயேசு தான் நம்மைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எதற்காக தனது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? அவர்களுடைய பணி என்ன? அவரது சிந்தனைகளை, அவரது கோட்பாடுகளை, அவரது போதனைகளை எடுத்துரைப்பதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்தார். எனவே, நாம் பேசக்கூடிய வார்த்தைகள் மட்டில் கவனத்தோடு இருக்க வேண்டும்.
நமக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், நாம் இயேசுவின் பிரதிநிதிகளாக இருப்பதால், நமது கருத்துக்களை நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், நம்மை யாரும் தனிப்பட்ட நபர்களாக பார்ப்பது கிடையாது. நாம் பேசுவதை நமது சிந்தனையாக யாரும் பார்ப்பது கிடையாது. மாறாக, இயேசுவின் மாதிரியாகப்பார்க்கிறார்கள். உதாரணமாக, ஒரு அருட்பணியாளர் ஆலயத்தின் பீடத்தில் நின்று பேசுகிறபோது, அவரை யாரும் வெறும் அருட்பணியாளராகப்பார்ப்பதில்லை. இயேசுவின் பிரதிநிதியாக, இயேசுவே பேசுவதாகப்பார்க்கிறார்கள். அதனால்தான், இயேசுவை நமது வாழ்வில் நாம் பிரதிபலிக்க வேண்டும்.
இந்த சமுதாயத்தில் கிறிஸ்தவர்களைப்பற்றிய ஒரு பார்வை மற்ற மதத்தினர் மத்தியில் உள்ளது. நாம் பேசக்கூடிய பேச்சுக்கள், பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மையும், நமது அடையாளத்தையும் உயர்த்திப்பேசுவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இயேசுவுக்கு அது அவமதிப்பைப் பெற்றுத்தருவதாக அமைந்துவிடும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்