நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும்
(யோவான் 3 : 31-36)
நற்செய்தியாளர் யோவான் திருமுழுக்கு யோவானின் சீடராவார் என விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் திருமுழுக்கு யோவானைப் பற்றிய பல நெருங்கிய குறிப்புகளை யோவான் நற்செய்தியில் அதிகமாகக் காணமுடிகின்றது. உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியை குருவே தமது சீடர்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இடியின் மகன் என்று அழைக்கப்படும் யோவான் இதனாலேயே இறைமகன் என்ற உண்மையைத் திருமுழுக்கு யோவான் வாயிலாக வலியுறுத்துகிறார்.
கூடவே இருந்து அறிந்ததால்தான் தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவை விண்ணக மகனாக நமக்கு எழுதுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” என்ற மறையுரைக்குச் சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான். “ மேலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர், தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார் (3:32) நாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்தவரிடம் விசாரிப்போம். ஓர் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்தவரிடம் விசாரிப்பதே சாலச் சிறந்தது. மண்ணுலகைச் சார்ந்தவன் மண்ணுலகைப் பற்றித்தான் கூறமுடியும். விண்ணுலகைச் சார்ந்தவரே விண்ணுலகைப் பற்றி எடுத்துரைக்க முடியும். எனவே தந்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள அவருடைய மகனின் வார்;தைகளைக் கேட்டு அறிந்து கொள்வதே நல்லது. மகனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது அன்புச் சீடரின் (யோவான்) வார்த்தைகளை வாசிப்பது சிறந்தது. “நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார்” (யோவான் 14:10)
இச்சான்றுகளை வைத்து இறைமகன் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரின் செயல்களைக் கொண்டாவது தம்மை இறைமகன் என்று நாம் இந்த உயிர்ப்பின் காலத்தில் ஏற்றுக் கொள்வோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு