நான் எதற்கும் அஞ்சிடேன்
அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் (திருப்பாடல் 23: 1) நமக்கு அழைப்புவிடுக்கிறது.
இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11)விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று சிக்கலான பிரச்சனையும் கூட. ஏனென்றால், எப்படிப்பட்ட பதிலும், இயேசுவுக்கு எதிராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இயேசு இந்த பிரச்சனையை வெகு எளிதாக கையாள்கிறார். அது மட்டுமல்ல. இந்த நிகழ்வைப் பயன்படுத்தி, சுற்றியிருக்கிற அனைவருக்கும், அருமையான பாடத்தையும் புகட்டுகிறார். இயேசுவின் இந்த துணிவு, கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையினால் விளைந்தது. அந்த நம்பிக்கையைத்தான், இந்த திருப்பாடல் (திருப்பாடல் 23: 1) நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.
நமது வாழ்க்கையில் கடவுள் மீது நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை, எந்த அளவுக்கு இருக்கிறது? எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும், கடவுள் என்னோடு இருக்கிறார் என்கிற, நம்பிக்கை இருக்கிறதா? அந்த ஆழமான நம்பிக்கையை நாம் நமக்குள்ளாகவும், நமது வருங்கால சந்ததியினரின் உள்ளத்திலும் விதைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்