நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன
திருப்பாடல் 65: 9, 10, 11 – 12, 13
உருவகம் என்பது ஒரு கருத்தை எளிதாக மக்களுக்கு உணர்த்த பயன்படுத்தப்படும் ஓர் உக்தி. அத்தகைய உருவகத்தை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய பாடல்களில் பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஆண்டவரை ஆயனாக உருவகப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு ஆயன் என்கிறவர் அவர்களுடைய வாழ்வோடு கலந்துவிட்டவர். ஏனெனில் அவர்கள் ஆட்டுமந்தைகளை மேய்த்து வந்தனர். அந்த ஆடுகளை காவல் காப்பதற்கு ஆயர்களை நியமித்திருந்தார்கள். எனவே, ஆயரின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்ததனால், ஆசிரியர் இதனைப் பயன்படுத்துகிறார். அதேபோல, இன்றைய திருப்பாடலில், நிலத்தை உருவகமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.
மனிதர்களை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். இறைவன் மனிதர்களைப் பண்படுத்துகிறார். இறைவாக்கினர் வாயிலாக வழிநடத்துகிறார். இறைவார்த்தையை விதைக்கிறார். விதைக்கிற ஒருவர் பலனை எதிர்பார்ப்பது நியாயம். அதேபோல இறைவார்த்தையை விதைத்து விட்டு, இறைவன் விளைச்சலுக்காக காத்திருக்கிறார். நல்ல விளைச்சலைக் கொடுப்பதும், கெடுப்பதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. விளைவதற்கு தேவையான எல்லா வசதிகளையும் இறைவன் நமக்குக் கொடுக்கிறார். அதனைப் பயன்படுத்தி, நாம் நல்ல விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்று, இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.
இறைவனின் அழைப்பை நாம் ஒவ்வொருவரும் ஏற்போம். கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற விளைச்சலை நாம் கொடுப்போம். அப்போது நாம் மட்டுமல்ல, இந்த உலகமும் பயன் பெறும். நிறைவைப்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்