நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல் மாறுவோம்.
அன்பும், பாசமும் நிறைந்த அன்பின் நெஞ்சங்களுக்கு நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நாம் நம்முடைய இதயங்களை சோதித்து பார்ப்போம். இதயம் என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வசனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? மேலோட்டமாக வாசித்து விட்டுவிடுகிறோமா? அல்லது வாசித்து, தியானித்து அதன்படியே வாழ்ந்து நமது வாழ்க்கையில் உண்மையோடும், தூய்மையொடும் இருந்து அந்த வசனம் முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன்தரும்படி செயல் படுகிறோமா?என்று யோசித்து பார்ப்போம். மத்தேயு 13:8,23 , மாற்கு 4:20 , மற்றும் லூக்கா 8:8.
இறைவார்த்தைகளை ஒவ்வொருநாளும் கேட்டு அதை உறுதியாக பற்றிக்கொண்டு சோதனை காலங்களிலும் சோர்ந்து போகாமல் கடவுள்மேல் முழு நம்பிக்கையை வைத்து அவரையே நோக்கி பார்த்து நம் தேவைகளை தந்தருள வேண்டுமாய் அவரின் பாதத்தை பற்றிக்கொள்வோம். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது நாம் எப்படி வாழவேண்டும் என்று பல உவமைகள் மூலம் நமக்கு விளக்கி காட்டியுள்ளார்.
வழியோரம் விதைக்கப்பட்டவர்கள் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தைகளை கேட்டு புரிந்து கொள்ள மாட்டார்கள். பாறைப்பகுதியில் விதைக்கப்பட்டவர்கள் இறைவார்த்தையை கேட்டவுடன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சிறிது காலம் மாத்திரம் இருப்பார்கள். ஏதாவது வேதனையோ, துன்பமோ வந்துவிட்டால் தடுமாற்றம் கொண்டு கடவுளை விட்டு தூரமாய் போய்விடுவார்கள். முட்செடி இடையில் விதைக்கப்பட்டோர் இறைவார்த்தையை கேட்டு உலக கவலையினால் அதை விட்டுவிடுவார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்களே கடவுள் விரும்பும் பிள்ளைகளாய் அவரின் சித்தத்தை செயல்படுத்த விரும்புவார்கள். இதில் நாம் எதில் இருக்கிறோம் என்று பார்த்து மனம் மாறுவோம்.
அன்பானவர்களே! கடுகு விதை மிகச் சிறியதாய் இருந்தாலும் அது முளைத்து வளரும்பொழுது மற்றச் செடிகளைவிட பெரியதாக வளர்ந்து வானத்து பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும்படி பெரிய மரமாகும். இதுபோல் நாம் இந்த உலகில் பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் கடவுளின் கரத்தை பற்றிக்கொண்டால் அவர்கள் யாராயிருந்தாலும் நம்மை தேடி வருவார்கள். ஒரு நிலத்தில் புதையல் இருப்பது தெரிந்தால் அதை மூடி மறைத்துவிட்டு தமக்குள்ள யாவற்றையும் கொடுத்து அந்த புதையலை பெற்றுக்கொள்ள விரும்புவார். அதுபோல் நாம் விண்ணுலகில் நமது தந்தையை தரிசிக்க இந்த உலத்தின் ஆசை, விருப்பம் யாவற்றையும் கொடுத்து விட்டு [வெறுத்து ஒதுக்கிவிட்டு]நம் தந்தையாம் கடவுளிடம் சென்று அவரோடு இருக்க விரும்புவோம். ஏனெனில் விண்ணக வாழ்வானது மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பானதாகும்.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு அதைக் காத்து மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கிறது. லூக்கா 8:15. தமக்கென்று வாழ்வோர் தமது வாழ்வை இழந்து விடுவர். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து மரித்ததனால் புதிய மரமாக உருவாகும். நாமும் இந்த தவக்காலத்தில் நம்முடைய பாவங்களுக்கு மரித்து இயேசுகிறிஸ்துவின் இரத்ததினால் கழுவப்பட்டு புதிய மனிதர்களாய், நல்ல நிலத்தில் விழுந்தவர்களாய் மாறுவோம்.
ஜெபம்
அன்பே உருவான இயேசுவே! நீர் எங்களின் பாவங்களை சிலுவையில் சுமந்து எங்களுக்காக மரித்து உமது உயிரை கொடுத்து மீட்டுள்ளீர். தகப்பனே அதை மறவாமல் நாங்கள், நீர் விரும்பும்படி நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்களாய் முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பலன் தர உதவி செய்யும் ஐயா. ஒவ்வொரு வசனத்தையும் உள்ளத்தில் பதித்து அதன்படி வாழ்ந்து உமக்கே மகிமை சேர்க்க அருள்தாரும். மற்றவர்களை நாங்கள் மனப்பூர்வமாய் மன்னிக்க நல்ல இதயத்தை தாரும். உம்மைப்போல் மாறவேண்டுமாய் விரும்பி வேண்டுகிறோம், எங்கள் இதய தகப்பனே!ஆமென்!!அல்லேலூயா!!!