நல்ல குடிமக்களா? நாட்டை மதியுங்கள்…
மத்தேயு 17:22-27
இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும், பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை.
ஆகவே புதிய ஒரு முயற்சியை கையிலெடுத்தனர். அதுதான் வரி செலுத்தவில்லை என்பது. அந்நாட்களில் உரோமை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என ஏகப்பட்ட வரிகள்.
வரி செலுத்தவில்லை என்று சொல்லி இயேசுவை மாட்ட வைக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இயேசு பேதுருவிடம் வரியை செலுத்தச் சொல்லுகிறார். ஆகவே இப்போதும் அவர்களின் திட்டம் உடைந்து விடடதை எண்ணி அவர்கள் மிகவும் வருந்தினர்.
இயேசுவின் இந்த செயல்பாடு ஒரு நல்ல குடிமகன் நாட்டை மதிக்க வேண்டும் என்பதையும் நாட்டிலுள்ள விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நாம் எல்லோரும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்றாற்போல நடக்கும் போது அமைதியும், ஒழுங்கான அமைப்பு முறையும் உருவாகிறது.
மனதில் கேட்க…
- நான் ஒரு நல்ல குடிமகனா?
- சட்டதிட்டங்களை மீறாமல் கவனமாய் என்னால் கடைப்பிடிக்க முடிகிறதா?
மனதில் பதிக்க…
ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; (திபா 119:1,2)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா