நல்லா பாடுங்க! சத்தமா பாடுங்க!
லூக்கா 1:46-56
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்னை மரியாள் ஆண்டவரிடமிருந்து அளப்பெரிய நன்மைகளை பெற்று அவரின் அன்பை ஒரு பாடலாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பாடுகிறார். அவருடைய பாடலில் போற்றுதல், நன்றி, கடவுளின் சிறப்பான பண்புகள் ஆகியவற்றை அடுக்கி வைத்து இந்த பாடலை அவர் இசைத்திருக்கிறார். அன்னையைப் போன்று நாமும் பல அளப்பெரிய நன்மைகளை நம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனைப் பற்றிய இசையை வெளியிட வேண்டும்.
1. ஆலயத்தில் பாடுங்க…
ஆண்டவரின் அதிசயமான நன்மைகளைப் பற்றிய புத்தகங்களை நாம் படைக்க வேண்டும். அந்த புத்தகங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து புறப்பட்டு வர வேண்டும். பாடல்களில் போற்றுதல், ஆராதனை மற்றும் அவரின் சிறப்பான பண்புகள் இடம்பெற வேண்டும். இந்தப் பாடல்களை நாம் நம்முடைய ஆலயத்தில் பாடலாம்.
2. மேடையில் பாடுங்க…
ஆண்டவரின் நன்மைகளை பல மேடைகளில் பாட வேண்டும். ஆண்டவர் நமக்கு செய்த வல்ல செயல்களை மற்றவர் அனைவரும் அறியும்வண்ணம் நம் பாடல்களை மேடையில் சத்தமாகவும், வல்லமையோடும் பாட வேண்டும்.
மனதில் கேட்க…
1. என் பாடலை எழுதி புத்தகங்களில் வெளியிட முயற்சி எடுக்கலாமா?
2. என் வாழ்க்கை அனுபவத்தை பாடலாக பாடி மேடையில் பாடலாமா?
மனதில் பதிக்க…
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது (லூக் 1:47)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா