நற்பேறு பெற்றவர் யார்?
திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6
நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வியோடு தொடங்குகிறது இன்றைய திருப்பாடல். நற்பேறு என்கிற வார்த்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம் எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிற வார்த்தை. இந்த உலகத்தில் வாழும் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தான் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகைய மகிழ்ச்சியான வாழ்விற்கு அழைப்பு விடுப்பதுதான் இந்த திருப்பாடல்.
பொல்லாரின் சொல்லோ, வாழ்வோ நம்மை நெருங்காதபடிக்கு பார்த்துக்கொண்டால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்வாக அமைந்துவிடும் என்பதுதான், ஆசிரியரின் தீர்வாக இருக்கிறது. இன்றைக்கு பொல்லாரைத் தேடி சிறைக்கே செல்லக்கூடிய கேவலமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொல்லார் என்று தெரிந்திருந்தும், சுயநலத்திற்காக, சுயஇலாபத்திற்காக, மானத்தை விட்டு, வெட்கத்தை விற்று, வாழ்வை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது கானல் நீராகவே இருக்கும்.
இன்றைக்கு உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம் தான். அவர்களுக்கு இந்த உலகத்தில் எந்த அடையாளமும் இல்லை. ஆனால், அவர்கள் எப்போதும் நிறைவாக இருக்கிறார்கள். அந்த உண்மையான மகிழ்ச்சியை ஆண்டவரிடத்தில் கேட்டு மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்