நற்செய்தி அறிவிப்பு
ஒரு நூல் எழுதுவது என்பது இப்போது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால், அது கடினமானது மட்டுமல்ல, அது மிகப்பெரிய சவாலான செயல். ஆனாலும், இயேசுபைப்பற்றிய நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லா சவால்களையும் துணிவோடு மேற்கொண்டு, இன்றைக்கு நாம் கிறிஸ்துவைப்பற்றி அறிவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த மாற்கு நற்செய்தியை எழுதிய, யோவான் மாற்கு உண்மையில் மாமனிதர்.
நற்செய்தி நூல் எழுதுவது மட்டும் கடினமானது அல்ல, அது எழுதப்படுகிற காலச்சூழலும், நற்செய்தியாளரின் வீரதத்தையும், துணிவையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளான காலம். இயேசுவைப்பற்றி அறிவதற்கு, அறிவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட காலம். இந்த காலக்கட்டத்தில் நிச்சயமாக நற்செய்தி எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். சவால்களை துணிவோடு எதிர்கொண்டு எழுதுவதுதான் உண்மையான எழுத்துப்பணி. இது அறிவை வெறுமனே பகிர்ந்து கொள்ளக்கூடிய முயற்சி அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துகின்ற பணி. அந்த பணியைச் செய்திருக்கிற மாற்கு நற்செய்தியாளர் உண்மையிலே, நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் தான்.
நற்செய்தி அறிவிப்பு நம்மீது சுமத்தப்பட்ட கடமை, என்கிற பவுலடியாரின் சிந்தனை கிறிஸ்தவர்கள் அனைவருடைய மனத்திலும் விதைக்கப்பட வேண்டும். நற்செய்தி அறிவிப்பு எளிதாக பல வழிகளில் அறிவிக்கப்பட முடியும் என்ற நிலை இருக்கிற இந்த காலக்கட்டத்தில், நான் எப்படி இயேசுவை அறிவிக்கப்போகிறேன்? என்ற கேள்வியோடு, நாம் பதில் தேட முனைவோம். நற்செய்தி அறிவிப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்