நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்
திருப்பாடல் 99: 5, 6, 7, 9
கடவுளைப் போற்றுவதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால் அவர் தூயவர் என்று ஆசிரியர் சொல்கிறார். இங்கே கடவுளுக்கு “தூய்மை“ என்கிற அடையாளம் கொடுக்கப்படுகிறது. தூயவர் என்பது அப்பழுக்கற்றவர் என்பதாக அர்த்தம் கொள்ளலாம். வெள்ளை மனம் உடையவர். புனிதத்தின் நிறைவாக ஆண்டவர் இருக்கிறார். எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும், இஸ்ரயேலின் கடவுளுக்கு நிகரான தூய்மை யாரிடமும் இல்லை என்பது இங்கு தரப்படுகிறது கூடுதல் செய்தி.
தூய்மையின் உறைவிடமாக இருக்கிற இறைவனை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான், நமக்கு கொடுக்கப்படுகிற சிந்தனையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலும் இதே சிந்தனை தான் நமக்குத்தரப்படுகிறது. புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்கிறார். விலையுயர்ந்த முத்தைக் காணக்கூடிய ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். அதேபோல, தூய்மையின் ஆண்டவரை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும். அவர் தான் நாம் பெறுதற்கரிய சொத்து. நம்முடைய வாழ்க்கை தூய்மையானதாக அமைய வேண்டுமென்றால், நாம் இறைவனை நம்முடையவராக்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு தூய்மையான எண்ணத்தையும், சிந்தனையையும் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் நடுவில் மங்கிக்கொண்டே செல்கிறது. எப்படியும் வாழலாம் என்கிற மனப்போக்கு தான் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலையிலிருந்து மாறி, தூய்மையை நாடக்கூடியவர்களாக வாழ, இறைவனின் அருள் வேண்டுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்