நம்முடைய மன்றாட்டை ஏற்றுக்கொள்ளும் நம் ஆண்டவர்
அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம் தேவைகளை நினைத்து மனம் கலங்கி நிற்கலாம். இக்காரியம் என்ன ஆகுமோ? எப்படி முடியுமோ? என்று திகைத்து இருக்கலாம். தேவையில் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நம் கர்த்தராகிய ஆண்டவர் நோக்கி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நம் கடவுளாகிய ஆண்டவர் நம் ஏக்கங்களை அறிந்து நமது வாழ்க்கையில் ஆசீரை தருவதாக வாக்களிக்கிறார். அவர் நமக்கு அளிக்கும் அனைத்து கட்டளைக்கும் நாம் கீழ்படிந்து நடந்தோமானால் நம்மை அவர் அவருடைய கண்ணின் மணியைப் போல் காப்பார்.
பிரியமானவர்களே! நம்முடைய முழு இருதயத்தோடும், முழு உள்ளத்தோடும் அவரை நேசித்து, அவருடைய குரலுக்கு செவிகொடுத்தால் நம்மேல் இரக்கங்கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். நாம் வானத்தின் கடை எல்லைவரை துரத்தப் பட்டிருந்தாலும் அங்கு இருந்து நம்மை அழைத்து வந்து நாம் விரும்பும் இடத்தில் சேர்ப்பார். நன்மைகள் யாவையும் தந்து பெருகச் செய்வார். நம்முடைய உள்ளத்தையும், நம் வழிமரபின் உள்ளத்தையும், பன்படுத்துவார். நாமும் வாழ்வு பெற்று அவருக்கு நன்றியுள்ளவர்களாய் மாறுவோம்.
இன்றும் குழந்தை இல்லையே என்று ஏங்கும் உங்களை நம் ஆண்டவர் உற்று நோக்குகிறார். உங்கள் மன்றாட்டை ஏற்று உங்கள் கருவில் ஒரு குழந்தையை வைத்து உங்களை ஆசீர்வதித்து உங்கள் குடும்பத்தை கட்டுகிறார். சாராளுக்கு கொடுத்து அவர்களை ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிக்கிறார். நம்பிக்கையோடு அவரை உற்று நோக்குங்கள். நிச்சயம் உங்கள் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்விடும். அவருடைய கட்டளைகளையும், நியமங்களையும் நீங்கள் கடைப்
பிடித்து முழு உள்ளத்தோடு அவரிடம் திரும்பி உங்கள் ஆசீரை பெற்று சுகமுடன் வாழுங்கள்.
நம் ஆண்டவர் நமக்கு கட்டளையிடும் யாவும் நமக்கு புரியாதது அல்ல. வெகுதொலைவிலும் இல்லை. நாம் அதை பெற்றுக்கொள்ள யார் நமக்காக வானத்துக்கு போய் கொண்டுவருவார்கள் என்று சொல்லும்படி அது விண்ணில் இல்லை. கடல் கடந்து சென்று யார் நமக்காக கொண்டு வருவார் என்று சொல்லும்படி அது கடல்களுக்கு அப்பாலும் இல்லை. எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள அவைகள் யாவும் உங்கள் அருகில் உங்கள் வாயில், உங்கள் உள்ளத்திலே தான்
இருக்கிறது. உங்கள் உள்ளத்தில் குடியிருக்கும் ஆண்டவர் எல்லாவற்றையும் அறிந்தவராய் நம்மீது தீராத அன்புக்கொண்டு நம்மோடு இருக்கும்பொழுது நமது மன்றாட்டை கேட்கும்பொழுது எதற்காக கலங்க வேண்டும்?நம்முடைய கடவுளாகிய ஆண்டவர்மீது மட்டும் அன்பு கொள்வோம். அவருடைய குரலுக்கு செவிகொடுப்போம். அவரே நமது வாழ்வு, அவரே நமது நீடிய, நித்திய வாழ்வு.
ஜெபம்
அன்பின் இறைவா! எங்கள் மன்றாட்டை கேட்பவரே! கண்ணீரை காண்பவரே! உள்ளம் உருகுபவரே!! உமக்கு கோடி ஸ்தோத்திரம். நீர் கட்டளையிடும் காரியத்தை நாங்கள் கடைப்பிடித்து எங்கள் தேவைகள் யாவற்றையும் உம்மிடம் அறிக்கை செய்து அதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக, சமாதானமாக வாழ அருள்புரியும்படி கெஞ்சி வேண்டுகிறோம். எங்கள் குற்றம், குறைகளை மன்னித்து எங்கள் பாவங்களை மன்னித்து உமது கிருபையை எங்கள்மேல் பொழிந்தருளும். வானத்தில் இருந்து பனி பூமியில் பொழிவது போல உமது ஆசீர்வாதமும் எங்கள் மேல் பொழியட்டும். எங்கள் மன்றாட்டை கேட்பவரே நன்றி! நன்றி!! ஜெபம் கேட்கும் எங்கள் பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!.