நம்பிக்கை வைப்போம்
நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? எது ஆழமான நம்பிக்கை? எது உண்மையான நம்பிக்கை? நாம் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எப்படி வாழ்வோம்? என்பதை, நமக்கு கண்கூடாக காட்டுவது தான், இன்றைய நற்செய்தி. நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை நல்ல முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த உறவைப் பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். அந்த புரிதல் நமக்குள்ளாக இருக்கிறபோது, அந்த நம்பிக்கையைச் சிறப்பான விதத்தில் நாம் வாழ்ந்து காட்ட முடியும்.
கடவுளுக்கும், நமக்குமான உறவு என்ன? என்பதில் தான், அடிப்படைச்சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல் முழுமையாக, சரியான புரிதலோடு தீர்க்கப்பட்டால், அது எளிதானதாக மாறிவிடும். இன்றைய நற்செய்தி, கடவுளுக்கும் மனிதருக்குமான உறவை, தலைவர், பணியாளர் எடுத்துக்காட்டுக்களை வைத்து நமக்கு விளக்குகிறது. இங்கே, பணியாளர் என்பவர், கேள்வி கேட்பவராக இல்லை. பணியாளர் தலைவரை முழுமையாகப் பற்றிப்பிடிப்பவராக, அவருக்கு பணிவிடை செய்கிறவராக சித்தரிக்கப்படுகிறார். எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், பணியாளருடைய பணி, தலைவருக்கு பணிவிடை செய்வதுதான். தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்பதோ, அல்லது தன்னை நியாயப்படுத்துவதோ அங்கு இருக்க முடியாது. எது நடந்தாலும், தான் பணியாளர் என்கிற அந்த எண்ணம், அவருக்குள்ளாக முழுமையாக நிறைந்திருக்கிறது.
இன்றைக்கு நமது வாழ்வில் எது நடந்தாலும், கடவுள் முன்னிலையில் நாம் பயனற்ற ஊழியர்கள் என்கிற எண்ணம் நமக்குள்ளாக ஆழப்படுத்தப்பட வேண்டும். அதேபோல எதைச்செய்தாலும், எங்கள் கடமையைத்தான் செய்தோம், என்கிற பணிவு, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் நமக்குள்ளாக இருக்க வேண்டும். அந்த பார்வையோடு நமது வாழ்வை நாம் அணுகுகிறபோது, நிச்சயம் நமது நம்பிக்கை அதிகமாகும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்