நம்பிக்கை வழியாக இறையாசீர் பெறுவோம்
இன்றைய நற்செய்தியில் பல ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார். யூதர்களுடைய பார்வையில் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட நோய் கொடுமையானது மற்றும் அவமானத்துக்குரியது. மக்கள் மத்தியில் அது அருவருக்கத்தக்க நோயாகக் கருதப்பட்டது. நிச்சயம் அந்தப்பெண் தாழ்வு மனப்பான்மையோடு இருந்திருக்க வேண்டும். லேவியர் 15: 25 – 27 ல் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட சட்டம் விளக்கப்படுகிறது. “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்….”. ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது.
அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவள் வந்ததே யாருக்கும் தெரிந்திருந்தால், அவளை கூட்டத்திலிருந்து வெளியேற்றியிருப்பார்கள். ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால், என்னென்ன மருத்துவம் பார்க்க முடியுமோ, அவையனைத்தையும் அவள் பார்;த்திருந்தாள். இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் அவளுக்கு இயேசுவிடமிருந்து வல்லமை கிடைக்கிறது. அவள் கூட்டத்தில் தெரியாத நிலையில் இருந்தாலும், அவளிடத்தில் நம்பிக்கை இருந்ததால், இயேசுவின் அன்பு அவளுக்கு கிடைக்கிறது. அவள் கூட்டத்திலே தெரியாமல் போய்விடவில்லை. இயேசுவின் பார்வை அவளுடைய நம்பிக்கையின் வழியாக அவள் மீதும்படுகிறது.
நம்பிக்கையோடு கடவுளை அணுகுகின்றபோது, நாமும் கடவுளின் அருளை நிரம்பப்பெற்றுக்கொள்ள முடியும். நமக்கு இறையருள் கிடைக்குமா? என்ற தயக்கம் தேவையில்லை. கடவுளை நம்புவோம், இறையாசீர் பெற்றுக்கொள்வோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்