நம்பிக்கையின் ஆழம்
மாற்கு நற்செய்தியாளர் ”தலித்தா கூம்” என்கிற அரேமேய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதற்காக மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியில் தனது நற்செய்தியை எழுதுகிறபோது, அரேமேய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? மாற்கு நற்செய்தியாளர் இந்த வார்த்தையை பேதுருவிடமிருந்து அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவின் மூன்று முக்கிய சீடர்களுள் ஒருவர். இறந்த சிறுமியை உயிர்ப்பிக்கும்போது, அவர் இயேசுவோடு நிச்சயம் இருந்திருப்பார். இறந்த போயிருக்கிற சிறுமி உயிரோடு எழுந்தது, பேதுருவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிச்சயமாக பதிந்திருக்கும். அந்த நிகழ்வு அவருடைய கண்களை விட்டு எளிதாக அகலக்கூடியது அல்ல. எனவே, இயேசு பயன்படுத்திய ”தலித்தா கூம்” என்கிற வார்த்தை நிச்சயமாக அவர் மறந்திருக்க மாட்டார். அதனால் தான் அந்த வார்த்தை மறக்கப்படாமல் இங்கே பயன்படுத்தப்படுகிறது.
இந்த பகுதியில் இரண்டு விதமான மனநிலையைப்பார்க்கிறோம். 1. சுற்றிருக்கும் மக்கள் கூட்டம் நம்பிக்கையிழந்த மனநிலையோடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இயேசு நம்பிக்கையோடு காணப்படுகிறார். அதன் வெளிப்பாடுதான் ”அஞ்சாதே” என்கிற வார்த்தை. 2. அழுது, புலம்பி அங்கலாயித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். மற்றொருபுறம் அமைதியான இயேசு. இறப்பு வருத்தமளிக்கும், நெஞ்சைக்கிழிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனாலும், எதிர்பாராத நிகழ்வுகளையும் தாங்கும் உறுதியான நெஞ்சம் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டுவிதமான மனநிலையின் வேறுபாட்டிற்கான காரணம், இயேசு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் கூட்டத்தினருக்கு நம்பிக்கையில்லை.
கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு வைக்கலாம், என்று நம்பிக்கையின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவை நமது வாழ்வில் பின்பற்றினால், நிச்சயம் நம்பிக்கையின் ஆழத்திற்கு நாமும் செல்ல முடியும். வாழ்வை இயேசுவின் மனநிலையோடு அணுக முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்