நம்பிக்கையாளர்கள்
2கொரிந்தியர் 4: 7 – 15
நம்பிக்கையாளர்களின் வாழ்க்கை எப்படி அமைகிறது? என்பதை, இன்றைய வாசகம் நமக்கு சிறப்பான விதத்தில் வெளிப்படுத்துகிறது. பொதுவாக, நம்பிக்கையாளர்கள் தாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் பொருட்டு, பல்வேறுவிதமான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகுகிறார்கள் என்பது, அன்றாட வாழ்க்கையில் நாம் கண்கூடாக பார்க்கிற உண்மை. அவர்கள் படுகிற துன்பங்கள், சோதனைகள், சவால்கள், அவர்களுக்கு சோர்வை உண்டாக்குகிறதா? அவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்று விட தூண்டுகிறதா? என்று, நாம் சிந்தித்துப் பார்த்தால், பதில் நாம் ஆச்சரியப்படும்படியாகத்தான் இருக்கும். அத்தகைய நம்பிக்கையாளராகிய விளங்கிய பவுலடியார் தன்னுடைய நம்பிக்கை வாழ்வை அணுகுகிற முறையை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம்.
தன்னுடைய வாழ்க்கையில் அவர் துன்பங்களைப் பார்க்கவில்லை என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. உண்மையில் தன்னுடைய வாழ்வு முழுவதிலும் துன்பத்தை மட்டுமே அனுபவித்தாக அவர் சொல்கிறார். ஆனால், எவ்வளவு நெருக்கடிகள், வேதனைகள் வந்தாலும், அதில் அவர் எப்போதுமே மகிழ்ச்சியோடு தான் இருந்தார் என்பதை, வெளிப்படுத்துகிறார். “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்பறுத்தப்பட்டாலும் கைவிடப்படுதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை”. ஆக, அவருடைய வாழ்க்கையில் அவர் சந்தித்த துன்பங்களோ, நெருக்கடிகளோ, வேதனைகளோ அவரை எப்போதும் நம்பிக்கையிழக்கச் செய்ததில்லை. மாறாக, அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது. ஆக, உண்மையான விசுவாசிகள் என்றுமே இறைவன் மீது தாங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையில் தவறுவதில்லை.
நான் கடவுளின் மீது நம்பிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதுதான், தந்தையாகிய இறைவனின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் சிறப்பாக, வாழ்க்கையில் நாம் துன்பப்படுகிறபோது, எதைப்பற்றியும் கவலைப்படாமல், என்னோடு ஆண்டவர் இருக்கிறார், அவர் என்னைப் பார்த்துக் கொள்வார் என்கிற, ஆழமான விசுவாச மனநிலையை நாம் பெற்றவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்