நம்பிக்கையால் உண்டாகும் மேன்மை
ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார். ஒருவர் வேலை செய்வதனால் கூலி அதாவது சம்பளம் கிடைக்கும். அது அவர்களின் உரிமை.அது நன்கொடை ஆகாது. ஒருவர் தம் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் கடவுள்மீது அதிக நம்பிக்கை கொண்டால், ஒருவேளை அவர் அதிகமான இறைப்பற்று இல்லாதவராக இருந்தாலும், அவர் கடவுள்மேல் வைத்த நம்பிக்கை யின் பொருட்டு கடவுள் அவரை தமக்கு ஏற்புடையவராக கருதுகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரது செயல்களை கவனிப்பதைவிட அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கவனிக்கிறார். அந்த நம்பிக்கையினால் அவர்கள் மேன்மை அடையும்படி செய்கிறார்.
இதற்கு உதாரணமாக நாம் பலருடைய வாழ்க்கையை காணலாம். நாம் கண்ணால் காண்பதை நம்புவதும்,நம் வேலைக்கு தக்க கூலி வாங்குவதும் ஒன்றும் அதிசயமில்லையே! நாம் காணாததை நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்றை நம்புவதே நம்பிக்கை. நோவா கண்ணுக்கு புலப்படாததை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப்பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஆபிரகாம் வயது முதிர்ந்த நிலையில் இருந்த பொழுதும் அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான்.
வானதூதர் அன்னை மரியாவுக்கு தோன்றி, கிருபை பெற்றவளே! வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ” என்று வாழ்த்திய பொழுது இந்த வாழ்த்து எப்படிப்பட்டதோ என்று சிறிது கலங்கினாலும் பின்பு கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆண்டவர் இந்த அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் என்று சொல்லி அதனால் தனக்கு வரும் எல்லா கஷ்டங்களையும் பொறுமையோடு சகித்து ஆண்டவரின் தாயார் எனப்பெயர் பெற்றார். இஸ்ரயேலர் கட்டாந்தரையைக் கடப்பதுபோல் செங்கடலை கடந்தது நம்பிக்கையினால்தான். இராகாபு என்ற பெண் ஒரு விலைமகளாக இருந்தபொழுதும் தானும் தன் வீட்டாரும் அழிந்து போகாதப்படிக்கு ஒற்றர்களை வரவேற்று கீழ்படியாதவரோடு அழிந்து போகாதப்படிக்கு தன்னை காத்துக்கொண்டது நம்பிக்கையினால்தான் இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆண்டவரும் நம்மிடமும் இதுமாதிரியான நம்பிக்கையையே எதிர் பார்க்கிறார். சில சமயம் கண்டித்து திருத்துவார். சில சமயம் தண்டித்து திருத்துவார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாம் நமது நம்பிக்கையில் மனம் தளராது உறுதியோடு இருந்தால் நமது தளர்ந்து போன உள்ளங்களை திடப்படுத்தி நம்மை ஆற்றி,தேற்றி,நேர்மையான பாதையில் நடத்திச் செல்வார். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்.இந்த உலகை வெல்வது நம்முடைய நம்பிக்கையே! இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர இந்த உலகை வெல்வோர் யார்? ஆம்,பிரியமானவர்களே! கடவுளின் பிள்ளைகளாகிய நாமே நம்பிக்கையால் மேன்மை பெறுவோம்.
நம்பிக்கையின் ஊற்றாகிய இறைவா!
உம்மை போற்றி துதிக்கிறோம்.இயேசுவே ! நீர் உமது தந்தைமீது வைத்த நம்பிக்கைபோல் நாங்களும் உமது மீது வைத்து உம்மையே சார்ந்துக்கொள்ள உதவி செய்யும். ஏனெனில் நீரே எங்களுக்காக உமது தந்தையிடம் பரிந்து பேசி எங்களுக்கும் உமது தந்தைக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்து செயல்படுகிறீர். எங்கள் நம்பிக்கையை தொடக்குவதும் நீர்தானே! எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்துப் போகாமல் காத்துக்கொள்ளும். எங்களுக்கு வேண்டிய நல்ல சுகத்தையும், பொருளாதாரத்தையும், கொடுத்து அந்தந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தோடு வழிநடத்தும். உமது இரக்கமும்,கிருபையும் என்றென்றும் எங்களோடு இருக்கும்படி உம் பாதம் விழுந்து கெஞ்சி முத்தமிட்டு மன்றாடுகிறோம். ஜெபத்தை ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு கோடி நன்றிகள் சொல்கிறோம். எல்லா துதி, கனம், மகிமையாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்.
ஆமென்! அல்லேலூயா!!