நம்பிக்கையான வாழ்வு
புனிதர்களுக்கு நாம் அனைவரும் சிறப்பாக விழா எடுக்கிறோம். அவர்கள் வாழ்ந்த மிகச்சிறந்த தியாக வாழ்விற்காக, எந்த தருணத்திலும் கடவுளைப் பற்றிப்பிடித்துக்கொண்ட அந்த உறுதியான விசுவாசத்தை எண்ணிப்பார்த்து, நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதேவேளையில் அவர்களிடம் நாம் மன்றாடுகிறோம். எதற்காக புனிதர்களிடம் செபிக்க வேண்டும்? நமக்குத் தேவையென்றால் நாம் தானே செபிக்க வேண்டும்? நமது விசுவாசத்திற்குத்தானே கடவுள் பதில் கொடுப்பார்? அப்படியென்றால், புனிதர்களிடம் “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்“ என்று எதற்காகச் செபிக்கிறோம்? இந்த கேள்வி நிச்சயம் நம் அனைவரின் உள்ளத்திலும் எழும். இந்த கேள்விக்கான பதிலாக அமைவது தான், இன்றைய நற்செய்திப்பகுதி.
இன்றைய நற்செய்தியில் (லூக்கா 5: 17-26) முடக்குவாதமுற்ற மனிதன் ஒருவனை அவனுயை நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இங்கே முடக்குவாதமுற்ற மனிதன் பேசக்கூடிய நிலையிலும் இல்லை. அவனிடத்திலே விசுவாசம் இருந்ததாகவும் சொல்லப்படவில்லை. ஆனால், அவன் அங்கு வந்தது அவனுடைய நலம்விரும்பிகளின் விசுவாசத்தால். முடக்குவாதமுற்ற மனிதனை, இயேசுவிடம் கொண்டு சென்றால், நிச்சயம் குணம்பெறுவான், என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கையின்பொருட்டு, அவனுக்கு இயேசு சுகம் தருகிறார்.
இன்றைக்கு புனிதர்களின் மன்றாட்டிற்காக பல திருத்தலங்களுக்கு கால்நடையாக, குடும்பம், குடும்பமா செல்வதைப்பார்க்கிறோம். இந்த பக்திமுயற்சிகளும் நிச்சயம் பலன் தரக்கூடியவைதான். ஏனென்றால், புனிதர்கள் நமக்காகச் செபிக்கிறார்கள். நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள். அவர்களது புனித வாழ்வின் பொருட்டு, நமது தேவைகளை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுகிறார்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்