நம்பிக்கைதான் வாழ்க்கை
இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவம் தான் விவிலியத்தின் பழைய ஏற்பாடு. நாடோடிகளாக, நாடே இல்லாமல், தங்களை வழிநடத்த அரசர் இல்லாமல், போர்த்தந்திர முறைகள் தெரியாமல் வாழ்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்டார்கள். ஆனால், அவர்களைச்சுற்றிலும் பெரிய நிலப்பரப்புகளோடு, வழிநடத்த அரசர்களோடு, போர்த்தந்திர முறைகளோடு பாபிலோனியர்கள், அமலேக்கியர்கள், கானானியர்கள் எனப் பலர் வாழ்ந்து வந்தனர். இஸ்ரயேல் மக்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் வழிபட்டு வந்த ‘யாவே’ இறைவன். சிறிது காலங்களுக்குப்பின் அவர்கள் நாடுகளைக்கைப்பற்றி, ஒரு பெரிய தேசமாக உருவானபோது, இது தங்களின் வலிமையினால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக, ‘யாவே’ இறைவன் தந்த வெற்றி என்று ஆர்ப்பரித்தனர். இது நெடுநாள் நீடிக்கவி;ல்லை. யாவே இறைவனை விட்டு விலகிச்சென்று, இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தவுடன் நாட்டை இழந்து அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது, கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அவர்களை மீட்பதற்காக மெசியாவை அனுப்புவேன் என்று இறைவாக்கினர் எசாயா வாயிலாக உரைக்கிறார். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11) வாசிக்கிறார்.
மெசியா வரும்போது என்னென்ன மாற்றங்கள் வரும், என்னென்ன அருங்குறிகள் தோன்றும் என்பதை இன்றைய வாசகம் நமக்குத் தெளிவாக்குகிறது. குருடர் பார்வை பெறுவர், முடவர் நடப்பர், கைசூம்பிப்போனவர்கள் குணமடைவர், ஊமையர் பேசுவர், ஏழைகள் உரிமைவாழ்வு பெறுவர் என்பது போன்ற அதிசயங்கள், அற்புதங்கள் நடைபெறுவதுதான் மெசியா வருகையின் அருங்குறிகள். இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, எசாயாவின் மறைநூல் வாக்கு நிறைவேறியதாகச்சொல்கிறார். அதாவது தான்தான் வரவிருந்த மெசியா என்பதை இயேசு தெளிவாக்குகிறார். கடவுள் ஏழைகளின் சார்பானவர். ‘ஏழை’ என்கிற வார்த்தையின் பொருள், கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்கள். யாரெல்லாம் இந்த உலகத்தில் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறார்களோ, கடவுள் அவர்கள் சார்பாக இருக்கிறார். அவர்களை கைவிட மாட்டார். அந்தக் கடவுளின் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.
இறைவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. அவர்மீது முழுமையான நம்பிக்கை வைப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டிய ஒன்று. அந்த நம்பிக்கைதான், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை தந்தது. அவர்களை நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் எல்லாவித இடர்பாடுகளையும் தாங்கிக்கொள்ளச் செய்தது. அத்தகைய நம்பிக்கையை நாமும் பெற்றுக்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவன் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைப்போம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்