நம்பிக்கைகொண்டோர், நம்பிக்கையற்றோர்
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கையற்றோர் என்ற இருவகையான மனிதர்களைப்பற்றி நற்செய்தி கூறுகிறது. இயேசு தன் சீடர்களிடம் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவிக்க கட்டளையிடுகிறார். இயேசுவின் இந்த நற்செய்தியை நம்பாமல் இருப்பதே மிகப்பெரிய குற்றமாகச்சொல்லப்படுகிறது. அவர்கள் தண்டனைத்தீர்ப்பு பெறுவர் என்ற கடுமையான சொல் இங்கே பயன்படுத்தப்படுகிறது.
அப்படியானால் அந்த நற்செய்தியை ஏற்றும், அதை வாழ்ந்து காட்டாமல் இருக்கக்கூடிய நம்முடைய வாழ்வை நினைக்கும்போது சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவராக இருப்பது கிறிஸ்துவை முன்மாதிரியாகக்கொண்டு, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவது. அது ஏதோ பெயரளவில் வாழக்கூடியது அல்ல. அது ஓர் அர்ப்பண வாழ்வு. ஒவ்வொரு மணித்துளியும் இறைநம்பிக்கையோடு வாழக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வைத்தான் தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள். நற்செய்தியை வாழ்வாக்க, பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். பல்வேறு கொடுமைகளுக்கு தங்கள் உடல் உள்ளாக்கப்பட்ட போதிலும், நம்பிக்கையை மறுதலிக்காமல் அதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள்.
இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற விசுவாசம் அவர்களின் இரத்தத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம். இதனை மனதில்கொண்டு, அந்த விசுவாசத்திற்கு ஏற்ற வாழ்வு வாழ்வோம்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்