நமது விண்ணப்பத்தை கேட்பவர் நம் ஆண்டவர்.
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இன்றும் கண்ணீரோடு, கவலையோடு எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே, என்னை நேசித்து என்மேல் அன்பு காட்ட ஒருவரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கிறீர்களா? நீங்கள் விடும் பெரும் மூச்சை ஆண்டவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார் . உங்களுக்கு நேரிட்ட தீங்கை நினைத்து மனம் இரங்கி உங்கள் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற உங்களுக்காக காத்திருக்கிறார். இரவும்,பகலும் வெள்ளமென கண்ணீர் விடும் உங்கள் விண்ணப்பத்தையும், ஜெபத்தையும் கேட்கிறார். அதற்கு நாம் முதற்சாமத்தில் எழுந்து நம் உள்ளத்தில் உள்ளதை அவர்முன் நம் விண்ணப்பத்தை தண்ணீரைப்போல் ஊற்றும்படி கூறுகிறார். தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும், பகலும் தம்மை நோக்கி கூக்குரல் இடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ? அவர்களுக்கு துணை செய்ய காலம் தாழ்த்துவாரோ? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு நமக்கு வாக்கு அளிக்கிறார்.
லூக்கா 18:7.
நாம் ஞானமுள்ளவர்களாய் நடந்து நேர்மையானவற்றை பேசினால் கடவுளின் உள்ளம் மகிழ்ந்து நம் விண்ணப்பத்தைக் கேட்கும். வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் ஏங்காமல் ஆண்டவரிடம் எப்பொழுதும் அச்சம் உள்ளவர்களாய் இருந்தால் நம் வருங்காலம் வளமானதாயிருக்கும். நம்முடைய நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. நீதிமொழிகள் 23:15,18 . கடவுள் சொல்ல அப்படியே நடக்கும். கட்டளை இட அதுவும் அவ்வாறே செயல்படும். அவர் கட்டளை இடாமல் யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக் கூடும்? நன்மையும், தீமையும் புறப்படுவது உன்னதரின் வாயினின்று அன்றோ? ஆகவே நாம் நமது வழிகளை ஆய்ந்தறிவோம். ஆண்டவரிடம் திரும்புவோம். விண்ணக இறைவனை நோக்கி நம்முடைய இதயத்தையும், கைகளையும் உயர்த்துவோம்! அப்பொழுது அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நமக்கு உதவி கைவிடாமல் காத்து அவரின் பேரன்பால் நமக்கு இரங்குவார்.
ஆகையால் அன்பானவர்களே! எந்தவொரு காரியத்தைக் குறித்தும் கவலைப்படாமல் விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் அவரிடம் சமர்ப்பித்து நம்முடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். எல்லாவற்றிலும் உண்மையோடும், நீதியோடும் வாழ்ந்து அவர் பாதம் பணிவோம். நம்முடைய சுயநலத்தை நாடாமல் பிறர்மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்காக நாம் ஜெபிக்கும் பொழுது நம்முடைய தேவைகளை கடவுள் சந்திப்பார். இதுவே நாம் இந்த தவக்காலத்தில் செய்யும் நல்லதொரு காரியமாகும். நாமும் வாழ்ந்து பிறரையும் . வாழவைப்போம்.
ஜெபம்
அன்பின் இறைவா! எங்கள் ஜெபத்தை கேட்பவரே உமக்கு நன்றிபலி செலுத்துகிறோம். எங்கள் விண்ணப்பத்தை தண்ணீரைப்போல் உமது பாதத்தில் ஊற்றுகிறோம். நீர் தாமே கேட்டு எங்களை பொறுப்பெடுத்துக்கொண்டு ஆசீர்வதித்து வழிநடத்தும் .துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!