நமது பணி யாருக்காக?
ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள்.
இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள் யாருக்கு நம்முடைய பணி தேவையாக இருக்கிறது? யாருக்கு பணிவிடை செய்யப் போகிறோம்? யார் எப்படி சொன்னாலும், வழிபாட்டில் ஆர்வமாக இருக்கிற முதல் வகை மக்கள் நமது இலக்கா? அல்லது கடவுள் பக்கமே வராமல், அருட்பணியாளர்களுக்கு தலைவலியாக இருக்கிற, இரண்டாவது வகையான மக்களுக்கு நமது பணியா? இது எல்லாருக்கும் எழக்கூடிய சாதாரண கேள்வி. இன்றைய நற்செய்தி நமக்கு இதற்கான பதிலைத் தருகிறது. இதனுடைய புரிதல், நமது கடமையை நாம் செய்ய வேண்டும் என்பதுதான். ஒருவர் திருந்துகிறார் அல்லது திருந்தவில்லை என்பது அவரைப் பொறுத்தது. அதற்கு அவர் கடவுளிடம் கணக்கு கொடுக்கட்டும். ஆனால், நமது கடமையை நாம் செய்வதற்கு இன்றைய நற்செய்தி அழைப்புவிடுக்கிறது.
நமது வாழ்வில் பெரும்பாலும் முதல் வகையான மக்களுக்கு பணிவிடை செய்வதை நாம் இலக்காகக் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்களுக்காக, நம்மை மக்கள் மத்தியில் உயர்வாகக் காட்டுவதற்காகத்தான் நமது பணி இருப்பது போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனையும் கடந்து சிந்திக்க இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்