நமது பணி அன்புப்பணி
நல்ல ஆயருக்கும், கெட்ட ஆயருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தெளிவாகக்கூறுகிறது. ஓர் ஆயர் ஆட்டுமந்தை முழுவதிற்கும் பொறுப்பாளி. ஆமோஸ் 3: 2 ல், ஆயன் சிங்கத்தின் வாயிலிருந்து தன் ஆட்டினை மீட்பதை இதற்கு நல்ல உதாரணமாகச்சொல்லலாம். மந்தைகளில் ஏதேனும் ஓர் ஆட்டிற்கு ஏதாவது நேர்ந்தாலும், அது தன்னுடைய தவறால் அல்ல என்பதற்கு, அவன் சான்று கொடுக்க வேண்டும். விடுதலைப்பயணம் 22: 13 ல் பார்க்கிறோம்: ஆடு விலங்கினங்களால் பீறித்துண்டாக்கப்பட்டிருந்தால், பீறப்பட்டதைச் சான்றாகக் கொண்டுவருவார். அதனுடைய பொருள், ஆடு ஆயனுடைய தவறால் இறக்கவில்லை என்பதாகும். ஒரு நல்ல ஆயனுக்கு தன்னுடைய மந்தையை தன்னுடைய உயிரையே பணயம் வைத்துக் காப்பதென்பது இயல்பான ஒன்று.
ஆனால், மறுபக்கத்தில் கெட்ட ஆயனுக்கு தன் ஆட்டுமந்தையைப்பற்றிய கவலை சிறிதும் கிடையாது. அவன் அதை ஓர்; அழைப்பாக அல்ல, வெறும் தொழிலாக, தனக்கு சம்பளம் தரும் ஒரு வேலையாக நினைக்கிறான். எனவே, ஆடுகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலும், அதைப்பற்றிய கவலை இல்லாமல், தனது உயிரைக்காப்பதிலேயே அவன் கருத்தாய் இருக்கிறான். ஓநாய்கள் ஆடுகளுக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த ஓநாய்கள் கூட்டமாக வந்து, ஆடுகளை வேட்டையாடும். இந்த ஓநாய்களிடமிருந்து, தனது ஆடுகளைக்காப்பது ஆயனுடைய மிகப்பெரிய பணி. இயேசு இங்கே கற்றுத்தருகிற செய்தி: பணத்தை மையமாக வைத்துப் பணிசெய்கிறவர்களால், உண்மையான பணி செய்யமுடியாது. மாறாக, அன்பு என்ற அளவுகோலை அடிப்படையாகக்கொண்டு பணிசெய்கிறவர்களால் மட்டுமே, உண்மையான, நிறைவான பணிசெய்ய முடியும்.
கிறிஸ்தவ வாழ்வில், பணி என்பது பணத்திற்கான ஒன்றாக இருக்கக்கூடாது. அது அன்பின் நிமித்தமானதாக இருக்க வேண்டும். பணத்தை மையமாகக்கொண்ட பணியினால் மற்றவர்களுக்குள் பிரிவினையைத்தான் உண்டாக்க முடியுமே தவிர, மக்களை கட்டியெழுப்ப முடியாது. எனவே, நம்முடைய பணி அன்புப்பணியாக இருக்க, இறைவனை மன்றாடுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்