நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் !
இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:
- தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?
- நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?
- திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா?
ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். திருமுழுக்கின் வழியாக என்னை உமது அன்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். இறiவா, திருமுழுக்கால் திருச்சபைக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் நான் நன்கு செய்திட ஆவியின் ஆற்றலை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
– பணி. குமார்ராஜா