நமது சான்று எது ?
தனது பணி இறைவனின் பணிதான் என்பதற்கான சான்றுகளாக இயேசு முன்வைப்பவற்றை இன்று வாசிக்கிறோம்.
- திருமுழுக்கு யோவான். யோவான் “இவரே இறைவனின் செம்மறி” என்று அறிவித்தார்.
- தந்தை ஒப்படைத்த செயல்கள். எளியோருக்கு நற்செய்தி, நோயுற்றோருக்கு நலம், சிறைப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்பவை இறைவனால் அனுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு அவற்றைச் செய்தார்.
- வானகத் தந்தை. “இவர் என்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரலை பலர் கேட்டிருந்தனர்.
- மறைநூல். இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் மறைநூலில் முன்குறித்தபடியே நிகழ்ந்திருந்தன.
யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார். நாம் இறைவனின் விருப்பப்படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று இத்தவக்காலத்தில் ஆய்வு செய்வோம்.
மன்றாடுவோம்: நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் பற்றுகிறோம். மறைநூலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப் போல நாங்களும் இறைவார்த்தையின்படி வாழ, சாட்சிகளாய் மாற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா