நமக்காக பஸ்காவை ஆயத்தப்படுத்தினார்
கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்க தம்மை ஒப்புக்கொடுத்து பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்கிறார்.பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று அர்த்தம். அதாவது நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்கு அர்ப்பணித்து நம்மை விட்டு கடந்து தமது தந்தையிடம் பரலோகம் செல்கிறார். நமது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தாரானால் அவர் நம்மை விட்டு செல்லுமுன் நாம் அவரை உபசரித்து அனுப்புவோம். அதுபோல்தான் ஆண்டவரும் ஒரு நண்பராய் வந்து நம்மையெல்லாம் உபசரித்து நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் மீட்டு இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றுள்ளார்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் 430 வருஷம் அடிமைகளாய் இருந்து மாதங்களில் தலையாயது மாதமான முதல் மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட ஆண்டவர் ஆயத்தப்படுத்தின மாதம். எகிப்தை விட்டு இஸ்ரயேல் மக்கள் கானான் தேசத்துக்கு ஆண்டவர் அவர்களை அத்தேசத்திலிருந்து கடந்து செல்ல உதவுகிறார். கசப்பை உண்ட தமது மக்களுக்கு இனிப்பை அருளிய நாள். அதனால்தான் அந்த நாளில் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள் புளிப்பற்ற அப்பத்தோடும், கசப்பு கீரையோடும் உண்ணவேண்டும் என்றும் அதைப் பச்சையாகவோ, நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி உண்ணவேண்டும் என்றும் எதையும் விடியற்காலைவரை மீதி வைக்காமல் இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து கையில் கோல்பிடித்து விரைவாக உண்ண வேண்டும் என்றும் இது ஆண்டவரின் பாஸ்கா என்றும் விடுதலை பயணம் 12:1 to 13 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.
இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும் இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை, தலைமுறைதோறும் கொண்டாடவேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிட்டு அதை
நிறைவேற்ற தாமும் அதன் வழியில் நடந்து நம்மை தீவிரத்தோடு மீட்டுள்ளார். இதை நீங்கள் விடுதலை பயணம் 12ம் அதிகாரத்தில் வாசித்தால் நன்கு புரியும். இஸ்ரயேல் மக்கள் அதனை எவ்வளவு தீவிரத்தோடு நடத்தினார்கள் என்பது விளங்குகிறது.
இவ்விதமாய் தலைமுறை,தலைமுறையாய் கொண்டாடி வந்த பாஸ்கா விழாவை இயேசுவும் தமது சீடர்களோடு கொண்டாட ஏற்பாடு செய்வதை காணலாம். புளிப்பற்ற அப்பவிழாவின் முதல்நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?என்று கேட்டு அதற்கான ஏற்பாட்டை செய்கிறார்கள்.நம்முடைய தந்தையாம் கடவுள் நம்மேல் வைத்த அன்பினால் அன்று தீவிரத்தோடு எகிப்தியரை அழித்து தமது மக்களை மீட்டு கானானில் அடைக்கலம் புகும்படிசெய்தார். அந்த வழியில் வந்த நம்மையும் விண்ணுலகு கொண்டு செல்லும் நோக்கில் தமது உடலை நற்கருணையாகவும், தமது இரத்தத்தை பானமாகவும், பருகும்படி செய்து இவ்வுலகில் இருந்து நாம் கடந்து சென்று விண்ணுலகில் அவரோடு இருக்கும்படி இதை செய்கிறார்.
அன்பானவர்களே! நாமும் வேதத்தை நன்கு வாசித்து அதின் மகிமை கண்டு அதன்படியே வாழ்ந்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரைக் காட்டிக்கொடுக்காமல், மறுதலிக்காமல், அவரின் பாஸ்கா திருவிருந்தில் உண்மையாய் கலந்துக்கொண்டு உத்தமமாய் அவற்றை பின்பற்றி பக்தியோடும், அன்போடும், செயலாற்றி அவர் பாதம் பணிந்திடுவோம்.
ஜெபம்
அன்பின் தெய்வமே!பாஸ்கா விழாவை கொண்டாடும் நாங்கள் அதன் கருத்தை நன்கு புரிந்துக்கொண்டு நீர் விரும்பும் முறையில் வாழ்ந்து உமது நாமத்திற்கே மகிமை உண்ணாகும்படி வாழ போதித்து வழிநடத்தும். நீர் எங்களுக்காக இந்த உலகில் வந்து எங்கள் பாவங்களை சுமந்து எங்களை கடந்து சென்றதை மறவாமல் நன்றி உள்ளவர்களாய் வாழ்ந்து உம்மை அறியாத பிள்ளைகளையும் உம்மிடம் கொண்டுவர முன்மாதிரியான வாழ்க்கையை அருளும். நீரே இந்த உலகின் மீட்பர், இரட்சகர் இதை யாவரும் அறிந்து உமது உடலை புசித்து உமது இரத்தத்தை பானமாக பருகி நீர் அளிக்கும் நித்திய வாழ்வை பெற்றிட உதவிச் செய்யும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!