நமக்காக பரிந்து பேசுகிறவர் நம் இயேசுகிறிஸ்து
பிரியமானவர்களே!!!
இன்று நீங்கள் எனக்காக பரிந்து பேச யாருமில்லையே! என்று கவலைப்படுகிறீர்களா? நான் என்ன செய்தாலும் அதில் குறை, குற்றம்,என்று சொல்கிறார்களே என்று கலங்கித் தவிக்கிறீர்களா?
உங்களுக்காக பரிந்து பேசுகிற ஒருவர் உண்டு, என்பதை நீங்கள் யாவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும், என்று விரும்புகிறேன். அவரே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. 1 யோவான் 2 – 1 மற்றும் 2 என்ற வசனத்தை வாசித்து பார்ப்போமானால் நன்கு விளங்கும்.
அதுமட்டுமல்ல, நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் பாவங்களை நமக்கு மன்னித்து [ நம் பாவங்களுக்கு கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும்
கழுவாய் அவரே;] விண்ணுலகின் தந்தையிடம் பரிந்து பேசி நமக்கு எல்லா கவலைகளிலும் இருந்து விடுதலை வாங்கித்தருகிறார். அவரை ஏற்றுக்கொண்டு அவரையே நம்புவீர்களா?
பிள்ளைகளே, தந்தையரே, தாய்மார்களே, வாலிப சகோதரரே, சகோதரிகளே, சிறுவர்களே நீங்கள் யாவரும் கடவுளின் கடவுளின் வார்த்தையில் நிலைத்திருங்கள்.1 யோவான் 2 :12 லிருந்து 17 வரை உள்ள வார்த்தைகளை தியானியுங்கள்.
உலகின் மீதும் அதில் உள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு கடவுள்மேல் அன்பு இராது. அவர்மேல் உங்களுக்கு அன்பு இராவிட்டால்
எப்படி அவர் நமக்காக பரிந்து பேசுவார்? யோசித்துப்பாருங்கள். கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படி வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள். அவருடைய கட்டளைகளை கடைப்பிடித்து வாழுங்கள். கடவுள் உங்களிடம், எந்தவொரு பெரிய காரயத்தை, அல்லது செய்ய முடியாத காரியத்தை செய்ய சொல்லவில்லையே! அவருக்கு கீழ்படிந்து வாழ்ந்து அவருடைய பரிந்துரையை பெற்றுக்கொள்வோம்.
எங்களுக்காக பரிந்து பேசும் இயேசு சுவாமி, உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம். நீரே எங்களுக்காக பரிந்து பேசுகிற ஆண்டவர் என்று அறிந்துக்கொள்ள உதவி செய்த உம்முடைய இரக்கத்திற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே நாங்கள் நீர் விரும்பும் பாத்திரமாக மாறி வாழ எங்களுக்கு போதித்து வழி நடத்தும். நாங்கள் அறியாத செய்யும் பாவங்களை எங்களுக்கு மன்னித்து எங்கள்மேல் கிருபையாயிரும். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்.
ஆமென்! அல்லேலூயா!!!