நன்றியோடு துதிப்போம்
விண்ணையும், மண்ணையும் படைத்த தேவன் இந்த ஆகஸ்ட் மாதம் முழுதும் நம்மோடு இருந்து பாதுகாத்து ஒரு சேதமும் இல்லாமல் காத்து வழிநடத்தி வந்திருக்கிறார். நேற்று இருக்கும் ஒருவர் இன்று இருப்பது நிச்சயமில்லாத உலகத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கோம். அப்படியிருக்க நாம் ஆண்டவரை துதித்து போற்றும்படி அவர் நமக்கு தம்முடைய ஜீவனைக் கொடுத்து தமது செட்டைகளின் மறைவில் வைத்து காத்து அடுத்த மாதமாகிய செப்டம்பர் மாதத்தை காண கிருபை அளித்துள்ளார். அவரை நன்றியோடு துதிப்போம்.
இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்சனை. கவலை இல்லாத , தேவைகள் இல்லாத மனிதர்களே இல்லை. நம்முடைய ஒவ்வொரு தேவைகளையும் நமக்கு வெற்றி கரமாக செய்து கொடுக்கவே நம் ஆண்டவர் நம்மை காண்கிற தேவனாக இருந்து கரம் பிடித்து வழிநடத்துக்கொண்டு இருக்கார். நாம் நமது பாரங்களை அவர் பாதம் வைத்துவிட்டு நிம்மதியோடு அவரைப் போற்றித் துதிப்போம். ஏனெனில் அவர் துதிகளின் நடுவே இருக்கும் ஆண்டவர், அவர் விரும்பும் காரியமும் அதுவே. நாம் எல்லா தேவைகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவரை நம்பி துதிக்கையில் மனமிரங்கும் தேவன் தமது அளவற்ற தயவினால் ஒரு தாயைப் போல் ஆற்றி, தேற்றி, நம்மை காத்துக்கொண்டு வருகிறார்.
கிறிஸ்து அருளும் அமைதி ஒவ்வொருவரின் உள்ளங்களையும் நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம். நாம் யாவரும் நம்முடைய பாவத்துக்கென்று அவரோடு சிலுவையில் அறையப்பட்டு அவரோடு கூட உயிர் பெற்று எழுந்தவர்களானதால் மேலுலகு சார்ந்ததையே நாடுவோம். ஏனெனில் அவரே நமக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நாமும் மாட்சி பொருந்தியவர்களாய் தோன்றுவோம்.
நாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் அன்புக்குரியவர்கள். ஆகையால் நாமும் அவரைப்போல் ஒருவருக்கொருவர் பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய குணங்களால் நம்மை நிறைத்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் மன்னித்து அவரைப்போல் அன்பிலே நடந்து நமது வாழ்க்கையை ஆண்டவரின் பாதத்தில் சமர்ப்பித்து இந்த மாதம் முழுதும் ஒரு தீங்கும் தொடாமல் காத்த இறைவனை போற்றி திருப்பாடல்களையும், புகழ்ப்பாக்களையும், ஆவிக்குரிய பாடல்களையும், நன்றியோடு உளமாரப்பாடி கடவுளைப் போற்றுவோம். நன்றி உள்ளவர்களாய் நடந்துக்கொள்கிறோம் இறைவா போற்றி!!!
அன்பின் ஊற்றாகிய இறைவா!!
உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம், ஆராதிக்கிறோம். இந்த மாதம் முழுதும் எங்களோடு இருந்து காத்து வழிநடத்திய தேவனே உமக்கு நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம். நாங்கள் அறியாமல் தெரியாமல் செய்த பாவங்கள், அக்கிரமங்கள், யாவையும் கிருபையாக மன்னித்து காத்து வந்தது போல இந்த செப்டம்பர் மாதத்திலும் கூடவே இருந்து கண்ணின் மணியைப்போல் காத்துக்கொள்ளும். துதி,கனம் ,மகிமை, யாவும் உமக்கே செலுத்துகிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம். எங்கள் ஜீவனுள்ள தந்தையே !
ஆமென்! அல்லேலூயா!!!