நன்றியுள்ள உள்ளம்
ஓசேயா 8: 4 – 7, 11 – 13
தன்னுடைய மணமகளாக தேர்ந்து கொண்ட இஸ்ரயேல், வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு, அவர்கள் பின் சென்று, தன்னுடைய மணமகனான யாவே இறைவனுக்கு உண்மையற்று இருப்பது தான், ஓசேயா நூலின் பிண்ணனியில் சொல்லப்படுகிற செய்தியாக இருக்கிறது. இந்த நூலில் மூன்று வகையான மக்களுக்கு இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஓசேயா 5: 1 – 7: குருக்கள், இஸ்ரயேல் குடும்பத்தார், அரச குடும்பத்தார். இந்த மூன்று வகையான மக்களுக்குத்தான் கடவுளின் செய்தி வழங்கப்படுகிறது. ஆக, குறிப்பிட்ட மக்களுக்கு அல்ல, எல்லாருமே இந்த வரையறைக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அரசர் என்பவர் இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறவராக இருக்க வேண்டும். அவரால் தான், உண்மையான கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, மக்களை வழிநடத்த முடியும். ஆனால், மக்களோ தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களுக்குப் பிடித்தமானவர்களை அரசராக தேர்ந்தெடுத்து, தங்கள் விருப்பம் போல் வழிபாடுகளை மாற்றிக்கொண்டனர். இணைச்சட்டம் 4: 6, இறைவன் அவர்களுக்குக் கொடுத்த நியமங்களைப் பற்றியும், அதை இறைவன் கொடுத்ததன் காரணத்தையும் தெளிவாகக் கூறுகிறது. “நீங்கள் நியமங்களைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும், அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும், அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்”. ஆக, இறைவன் மக்களை ஞானமும், அறிவாற்றலும் சிறந்து விளங்கிட அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுக்கிறார். அவர்களோ, தங்கள் விருப்பம்போல், சட்டங்களையும், நியமங்களையும் மாற்றிக்கொண்டு, கடவுளுக்கு எதிரான செயல்பாடுகளி் ஈடுபடுகின்றனர். உண்மையில் அவர்கள் மகிழ்ச்சியடைகிற எரிபலிகளில் இறைவன் நாட்டம் கொள்ளவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்களை வளர்த்த இறைவனை மறந்துவிட்டார்கள். பாவத்தின் மீது நாட்டம் கொண்டு, தங்களை ஏற்றிவிட்டவரை தூக்கி எறிந்து விட்டார்கள். எனவே, அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டம் என்று இறைவாக்கு வழங்கப்படுகிறது.
நன்றி மறப்பது நல்லதல்ல. இன்றைய சமூகம் நன்றி இல்லாத சமூகமாக இருக்கிறது. எனவே தான், பெற்று வளர்த்த பெற்றோரை, கடைசி காலத்தில் தங்களோடு வைத்துக்கொண்டு பராமரிப்பதற்கு, வக்கற்ற சமூகமாக, அவர்களை பாரமாக நினைக்கிற சமூகமாக இருக்கிறது. அதற்கான தண்டனையை ஒவ்வொருவரும் அனுபவித்து ஆக வேண்டும். காலம் மாறும், காட்சிகள் மாறும். அப்போது நாம் பதில் கொடுக்க வேண்டியதிருக்கும். நம்மை ஏற்றிவிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்