நன்றியுணர்வு
நன்றி மறப்பது நல்லதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். நமது வாழ்வில் நாம் பல மனிதர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நன்றியுணர்வு என்கிற வார்த்தையும், அதற்கான பொருளும் இன்றைய சமூகத்தில் ஒரு பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. செய்த நன்றியை மறப்பது, நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். நன்றி என்ற வார்த்தைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தல் எடுத்துக்காட்டுக்களாக செக்கரியாவும், எலிசபெத்தும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
எலிசபெத்தம்மாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறக்கூடிய வயதையும் கடந்துவிட்டாள். அந்த தருணத்தில் கடவுளின் அருள் அவளுக்கு கிடைக்கிறது. குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு, யோவான் என்று பெயரிட பணிக்கப்படுகிறார்கள். பொதுவாக, குழந்தைக்கான பெயரை தாயோ, தந்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெயர்களில் தங்களின் நெருக்கமான உறவுகளின் பெயரையோ அல்லது தந்தை, தாயின் பெயரையோ வைப்பது இன்றைக்கும் நம் மத்தியில் காணப்படுகிறது. அதேபோல செக்கரியாவின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தம்மாளும் கடவுள் செய்த நன்மைகளுக்கு, நன்றியுணர்வோடு இருக்கிறார்கள். அதே பெயரைச் சூடுகிறார்கள்.
தேவை என்றால், கடவுளை நாடுவதும், தங்களது தேவை தீர்ந்தவுடன் கடவுளை மறந்துவிடுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எல்லா தருணத்திலும் நாம் கடவுளுக்கும், நமக்கு நன்மை செய்தவர்களுக்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். ஒருபோதும் மற்றவர் செய்த நன்மைகளை மறந்துவிடக்கூடாது.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்