நன்றாக பேசத் தெரியாதவரா நீங்கள்?
லூக்கா 12:8-12
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதர்களாகிய நாம் பிறந்ததும் அம்மா என்ற அழகான வார்த்தையை பேசுகிறோம். அந்த வார்த்தையைப் பேசிய பிறகு வளர வளர வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்கவே சகிக்க முடியவில்லை. எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. பேசத் தெரியாமல் பிறரை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் நபர்களுக்கான நல்லாலோசனையாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். என்ன நல்லாலோசனை?
அது தூய ஆவியார் தரும் நல்லாலோசனை. தூய ஆவியார் துணையை தினமும் நாடும் போடு அவர் கற்றுக்கொடுக்கிறார். அவர் வழிநடத்துகிறார். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் நமக்கு இயல்பாகவே தெரிகிறது. எப்படி தூய ஆவியாரை நாட வேண்டும். இரண்டு வழிகளில் நாம் நாடலாம்.
1. முழந்தாளிட்டு
தூய ஆவியாரை தேட வேண்டும் அதற்கான சரியான முறை முழந்தாளிடுவது. முழந்தாளிட்டு அவரிடம் மன்றாட வேண்டும். ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆவியே! என் நாவை சுத்தப்படுத்தும். ஆவியின் அக்கினியால் சுட்டெரியும். பரிசுத்தமாக்கும்! என இந்த மந்திரத்தை தினமும் மனதிற்குள் மெளனமாக சொல்ல வேண்டும்.
2. மூச்சியிலித்து
நாம் சுவாசிக்கும் போது மூச்சுக்காற்று உள்ளே செல்லும்போதெல்லாம் தூய ஆவியே எனக்குள்ளே வாரும். எனக்கு துணையாக வாரும் என தூய ஆவியை நம் உடலுக்குள் கொண்டு வர வேண்டும். இதை செய்ய செய்ய தூய ஆவியின் மூச்சாக நாம் மாறுகிறோம். இதை தொடாந்து செய்யும் போது நம் பேச்சு சுவையாக, இனிமையாக, வளமையாக மாறுகிறது.
மனதில் கேட்க…
1. உன் பேச்சு சரியில்லை என்று யாராவது என்னைப் பார்த்து சொல்லியிருக்கிறார்களா?
2. தூய ஆவியே என் நாவை சுத்திகரியும், பேச கற்றுத் தாரும் என்று ஜெபித்த பிறகு பேசியதுண்டா?
மனதில் பதிக்க…
நீங்கள் பேச வேண்டியவற்றைத தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.(லூக் 12:12)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா