நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போம்
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நாம் நம்முடைய ஆண்டவரின் திருவுள சித்தத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்து போகாமல் இருந்து அவரிடம் கற்றுக்கொண்ட போதனையின்படியே வாழ்ந்து நற்செய்திகளை பின்பற்றி வாழ்வோம். நாம் எப்பொழுதும் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க கற்றுக்கொள்வோம். உரோமையர் 16:19. இந்த உலகத்தின் போக்கின்படி இல்லாமல் நம் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைந்து எது நல்லது,எது உகந்தது,எது நிறைவானது என்பதை தெளிவாக கண்டு அதன்படியே வாழுவோம்.
நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுவோம். தீமை நம்மை வெல்ல இடம் கொடுக்காமல் நன்மையால் தீமையை வெல்லுவோம். நாம் கடவுளிடம் அன்புகூர்ந்து அவரது திட்டத்தின்படி செய்தால் அழைக்கப்பட்ட நம்மை தூய ஆவியானவர் எல்லாவற்றிலும் நம்மை நன்மையாகவே வழிநடத்துவார். ஆனால் நாம் சமயத்தில் நன்மை செய்ய விரும்பினாலும் நம்மால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. ஏனெனில் நமது பிறவிக்குணம் அவ்வாறு செய்ய வைக்கிறது. ஆகையால்தான் நாம் ஆண்டவரின் இரத்தத்தால் கழுவப்பெற்று பாவமன்னிப்பை பெற்று பாடுகளின் வழியிலும் பரிசுத்தமாய் வாழ்ந்து சிலுவையை சுமந்து சிங்காசனத்தை பெற்றுக்கொள்வோம்.
நன்மை செய்யும் விருப்பம் நம்மிடம் இல்லாமல் இல்லாமல் இல்லை. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. நாம் விரும்பும் நன்மையை செய்வதில்லை, விரும்பாத தீமையையே செய்துவிடுகிறோம். இதை நாமாக செய்வதில்லை. நம்மில் உள்ள பாவம் அப்படி செய்ய வைக்கிறது. திருச்சட்டம் தன்னிலே தூயதுதான் கட்டளையும் தூயது. நேரியது. நல்லது நமது சாவுக்கு காரணமாக மாறிவிட்டதா? ஒருபோதும் இல்லை.எல்லாம் பாவத்தின் வேலைதான். பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக நல்லதொன்றைக் கொண்டு நமக்குள் சாவை விளைவித்து கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை அளவு கடந்த முறையில் வெளிப்படுத்துகிறது. உரோமையர் 7:12,13.
சில நேரங்களில் நாம் பிறர்க்கு நன்மையான காரியத்தை செய்து இருந்தாலும் அவர்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள் அதை நினைக்கவும் மாட்டார்கள். அதையெல்லாம் மறந்து நம்மை எந்த வழியில் வீழ்த்தலாம் என்றே நினைப்பார்கள். ஆனால் நாமோ கடவுளின் வார்த்தையை நம் மனதில் பதிய வைத்து அவர்கள் செய்யும் தீமையை பொறுத்துக்கொண்டால் அதின் பயனை ஆண்டவர் நமக்கு கட்டளையிடுவார். நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்வதால் நாம் விசெசித்து செய்த காரியம் ஒன்றுமில்லையே. நமக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மையே செய்தால் நாமும் நமது ஆண்டவரின் குணாதிசயங்களை பெற்றவர்களாய் வாழ்ந்து அவரின் நாமத்திற்கே மகிமை உண்டு பண்ணுவோம்.
ஜெபம்.
அன்பின் பரலோக தந்தையே உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். கர்த்தாவே எங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் நாங்கள் நன்மையே செய்யும்படிக்கு கற்றுத்தாரும். உம்மைப்போல் எல்லோரையும் நேசித்து அவர்களோடு ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் வேண்டுதல் செய்து உம்முடைய எல்லா கற்பனைகளையும், கட்டளைகளையும் நிறைவேற்ற உதவி செய்தருளும். உம்முடைய எல்லா வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்து உமக்கே மகிமை செலுத்த எங்களை கரம் பிடித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே,ஆமென்!அல்லேலூயா!!!.