நன்மை செய்ய சூளுரைப்போம்
தீயது செய்வது மட்டும் தவறல்ல, நல்லதைச் செய்யாமலிருப்பதும் தவறு தான். இன்றைய நற்செய்தியில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைப்பார்த்து, மனமுடைந்து அவர்களின் அழிவை நினைத்து வேதனை கொள்கிறார். கடவுள் நம் அழிவில் மகிழ்ச்சி கொள்பவரல்ல. வேதனையுறுகிறவர். இஸ்ரயேல் மக்கள் செய்த தவறுக்குத்தான், அவர்கள் பலவேளைகளில் தண்டிக்கப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டபோது, அவர்களை விட, அவர்களுக்காக வருந்தியவர், கடவுளைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
அவர்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அதிலே ஒன்று, நன்மை செய்யாமலிந்தது. அதுவும் தவறுதான். நாம் தீயது செய்தால் தான், தவறு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என்று, நன்மை செய்யாமலிருக்கும் ஒருவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அதுவும் தவறுதான். கடவுளின் தண்டனையைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு, அந்த தவறு மிகப்பெரியது. எனவேதான், இயேசுவின் வாழ்வில் நாம் பார்க்கிறபோது, இயேசு சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு, இயேசு நன்மை செய்வதை, ஒரு அளவுகோலாக மட்டும் அல்ல, தனது வாழ்வாகவே கொண்டிருந்தார்.
நமது வாழ்வில் நாமும் இப்படித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். நான் தான் எந்த வம்புக்கும் போகவில்லையே? நான் தான் எந்த சண்டையையும் வளர்க்கவில்லையே? எனவே, நான் நல்லவன் என்று ஒருவர் சொல்லிவிட முடியாது. நன்மை செய்கிறவர்தான் நல்லவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும். நன்மை செய்கிறவர்களாக வாழ வேண்டும். அதற்கான அருள்வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்