நன்மை செய்யும் மனம்
தனது வார்த்தையின் மூலம் ஒருவருக்கு இயேசு சுகம் தருகிறார். இயேசு தன் முன்னால் நிற்கும் ஒருவருக்கு சுகம் கொடுப்பது நாம் பல புதுமைகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், எங்கோ இருக்கிற ஒருவருக்கு இயேசு சுகம் கொடுப்பது, அதுவும் தனது ஒரு வார்த்தை மூலம் சுகம் கொடுப்பது, நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியம். ஆனால், அதுதான் இயேசு. புதுமைகளின் நாயகன் நிச்சயம் இயேசுதான். இது நம்புவதற்கு கடினம் தான். ஆனால், அறிவியலே இதற்கு விளக்கம் கொடுத்து, அது நடக்கக்கூடியது என்கிற விளக்கத்திற்கு துணைநிற்கிறது.
எண்ணங்கள் போலத்தான் நமது வாழ்வு என்று பொதுவாகச் சொல்வார்கள். அதேபோல, நமது எண்ணங்களின் வழியாக, நமது உணர்வுகளை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். மற்றவர்களுக்கு செபிக்க முடியும். இயேசு நன்மை செய்வது, என்ற ஒற்றைக்குறிக்கோளில் தனது வாழ்வை அமைத்திருந்தார். அதற்கு எல்லாவிதமான வழிகளையும் அவர் கையாண்டார். கால்நடையாகச் சென்றார். தனக்கு எதிரில் வந்தவர்களைக் குணப்படுத்தினார். தனது ஆடையை தொட்ட பெண்ணை நலமாக்கினார். தன் கண்ணால் காணாத ஒருவருக்கு, இன்று சுகம் தருகிறார்.
நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும். அந்த எண்ணம், நாம் எதை நினைக்கிறோமோ, அதனை செயல்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும். இயேசுவுக்கு பலன் கொடுத்தது இந்த எண்ணம் தான். நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணம், இயேசுவை பல மக்களுக்கு நன்மை செய்திட, துணையாக இருந்தது. நமது வாழ்விலும், மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் வாழுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்