நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்
நமது வாழ்வில் எது கடவுளுக்கு பிரியமானது என்று நாம் நம்புகிறோமோ, அவற்றை நிறைவோடு, மகிழ்வோடு செய்ய வேண்டும் என்பதே, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்குக் கற்றுத்தரும் பாடம். ”என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்” என்ற தந்தையின் வார்த்தைகள், இதைத்தான் நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசு தனது மண்ணக வாழ்வை, கடவுளுக்காகவே வாழ்ந்தார். கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே, தன்னை முழுமையாகக் கையளித்தார். தனது வாழ்வையே இந்த உலகத்திற்காக தியாகம் செய்தார்.
இந்த உலகத்தில் நாம் அனைவருமே, நல்லது எது? கெட்டது எது? என்று அறிந்தவர்களாக இருக்கிறோம். நாம் எதைச்செய்தால் நன்றாக இருக்கும்? என்று தெரிந்திருந்தும், பல வேளைகளில், நாம் செய்ய வேண்டியதைத் தவறிவிடுகிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மற்றவர்கள் நம்மிடம் சொன்னால், நாம் செய்வோம் என்ற, மனநிலை கூட நம்மிடம் இருக்கலாம். ஒருவருக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும், அதற்கான வாய்ப்பிருந்தும், செய்யத் தவறினால், அதைப்போல வேறு கேடு கிடையாது. இயேசு மற்றவர்கள் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் செய்யவும் இல்லை. அவர் எதை உண்மை என்று நம்பினாரோ, அதை முழுமையாகச் செய்கிறார். நிறைவோடுச் செய்கிறார்.
நமது வாழ்வில், நன்மை செய்வதற்கு பழக நாம் அழைக்கப்படுகிறோம். நாம் எந்த நிலையில் இருந்தாலும், நன்மை செய்ய வேண்டும், என்ற எண்ணம் இருந்தாலே போதும். இந்த உலகம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். அத்தகைய நன்மை நிறைந்த வாழ்விற்காக இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்