நன்மையால் தீமையை வெல்லுங்கள்!! ரோமர் 12 : 21
தீமையையை வெறுத்து நன்மையை பற்றிக்கொண்டால் அப்பொழுது அந்த காரியம் கடவுளுக்கு மிகவும் பிரியமாக இருக்கும். ஏனெனில் நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதையே ஆண்டவர் எதிர்பார்க்கிறார். மற்றவர்களிடம் நம் உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். பிறரை உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள் என்று ரோமர் 12 : 9,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.
இரண்டு நண்பர்கள் மிகவும் பிரியமாய் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு பழகி வந்தனர். இதனால் பொறாமை கொண்ட இன்னொருவர் அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று நினைத்து அவர்களிடம் அன்புக் காட்டுவதுபோல் நன்றாக பேசி அவர்களின் சில ரகசியங்களை அறிந்துக்கொண்டு ஒவ்வொருவரிடம் இல்லாத கதையை சொல்லி அவர்களிடே பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் தான் சில நன்மைகளை அனுபவித்து வந்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரின் குணத்தை அறிந்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் கலந்து மனம் விட்டு பேசி தாங்கள் பிரிந்ததற்கு இன்னொருவரின் சூழ்ச்சியே காரணம் என்று தெரிந்துக்கொண்டு மறுபடியும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். இந்த உலகில் தீமை செய்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.நாம்தான் அதைக்கண்டு பொறுமையோடு தீமை நம்மை வெல்ல விடாமல் அந்த தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
நாம் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தோல்வியை கொடுக்கும். எப்படி அந்த இரண்டு நண்பர்களும் மறுபடியும் ஓன்று சேர்ந்து மனம் விட்டு பேசினார்களோ அதுபோல் உண்மையோடு இருந்தால் எந்த தீங்கும் நம்மை தொட முடியாது. துன்பத்தில் தளராத மனதுடன் இருந்து இறைவேண்டலில் நிலைத்திருந்தால் நம்முடைய காரியத்தை முற்றிலும் ஆண்டவர் பொறுப்பெடுத்து நம்மை காத்துக்கொள்வார். பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் கடவுளுக்குரிய செயல். நாம் அவரிடம் ஒப்புக்கொடுத்தால் எந்தத் தீமையையும் நன்மையால் வென்று ஆண்டவரின் நாமத்துக்கு மகிமை சேர்க்கலாம்.
அன்பே உருவான இறைவா!
தீமைக்கு பதில் தீமை செய்யாமல் நாங்கள் முடிந்தவரை எல்லோரோடும் அன்போடும், பாசத்தோடும், அமைதியோடும் வாழ நல்ல இதயத்தை தந்தருளும். உமது திருஇதயத்தைப்போல் எங்கள் இதயத்தையும் நீரே பொறுப்பெடுத்து அதில் நீரே வாசம் செய்யும். உம்மை சிலுவையில் அறைந்தவர்களை நீர் பழிவாங்காமல் உமது தந்தையை நோக்கி விண்ணப்பம் செய்து இவர்களுக்கு மன்னியும் என்று வேண்டி தீமையை உமது நன்மையால் வென்று அவர்களுக்கு இரக்கம் வைத்தது போல நாங்களும் எங்களுக்கு தீமை செய்பவர்களை மன்னித்து தீமையை நன்மையால் வெல்ல உதவி செய்தருளும். எங்களுக்கு போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் ஜெபம் ஏறேடுக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென்! அல்லேலூயா!!!