நன்மைக்கு விடுமுறை இல்லை
லூக்கா 6:6-11
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது.
1. குறைகளைக் கண்டுக் குனியாதே
நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் குறைகளுக்கு செவிமடுத்தால் நாம் குனிந்து போக வேண்டியதும் வரும். நம் நன்மைகள் உலகிற்கு கிடைக்காமலே போகும்.
2. எதிர்ப்பைக் கண்டு அலறாதே
பலவிதங்களிலே எதிர்ப்புகள் வரும். அவைகளைக் கண்டு புலம்பக்கூடாது, பதறக்கூடாது. அழவும் கூடாது, அலறவும் கூடாது. எதிர்ப்புகள் தான் நாம் நல்லது செய்கிறோம் என்பதற்கான அறிகுறி.
மனதில் கேட்க…
1. நன்மை எடுக்கும் நான் ஒரு நாளில் செய்யும் நன்மைகள் எத்தனை?
2. நன்மை எடுக்கும் போது குறைகளை, எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சலாமே?
மனதில் பதிக்க…
தீமையை விட்டு விலகு, நன்மையே செய். நல்வாழ்வை நாடு. அதை அடைவதிலேயே கருத்தாயிரு (திபா 34:14)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா