நடந்ததை சொல்லு…
மத்தேயு 9:27-31
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள்.
அன்புமிக்கவர்களே! நாமும் பார்வையற்ற இருவரை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து அதிசயம், புதுமைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் போன்று ஆண்டவரின் வல்லமையை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்கலாம்? இரண்டு முறைகளில் அதை செய்வது சிறப்பு
1. அன்பியங்களில் அறிவி
அன்பியக் கூட்டங்களில் இறைமக்கள் நிறைய பேர் கலந்துக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இறைமக்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு அங்கு நேரம் தரப்படுகிறது. அந்த நேரத்தில் பலர் மெளனமாகவே இருந்துவிட்டு வீடு வருகின்றனர். இந்த நேரத்தை இதற்காக பயன்படுத்தினால் நலமாக இருக்கும். ஆண்டவர் செய்த நல்ல செயல்களை சாட்சியாக அறிவித்தால் அது மிகவும் இனிமையாக இருக்கும். இனி செய்வோமா!
2. அன்பர்களிடம் அறிவி
நமக்கு பிரியமான அன்பர்கள் பலர் இருக்கிறார்கள் அல்லவா! அவர்களிடம் ஆண்டவரின் வல்ல செயல்களை, அவர் செய்த புதுமைகளை எடுத்துரைக்கலாம். அலைபேசியில் பல அவசியமற்றவைகளை பேசாமல் நமக்கு ஆண்டவர் செய்த நல்லவைகளை பேசலாம். அதன் மூலமாக ஆண்டவரின் பெருமைகளை பலரும் அறியச் செய்யலாம்.
மனதில் கேட்க…
1. என் வாழ்வில் இயேசு செய்ததை யாரிடமாவது சொல்லியிருக்கிறேனா?
2. அன்பியக் கூட்டங்களுக்கு செல்லும் பழக்கம் உண்டா?
மனதில் பதிக்க…
பார்வையற்ற இருவர் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள் (மத் 9:31)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா