நச்சரிப்பு நல்லவராக்கட்டும்!
லூக்கா 18:1-8
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
தீயவர்கள் தீமையில் வாழ்வது நல்லதல்ல. அத்தீயவரை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டியது அருகிலிருக்கும் ஒரு நல்லவரின் பொறுப்பு. இன்றைய நற்செய்தி வாசகம் நேர்மையற்றவராக இருந்த நடுவரை நல்லவராக மாற்றிய கைம்பெண்ணைப் பற்றிக் கூறுகிறது. நம்மையும் இந்த சிறப்பு பணியைச் செய்ய அழைக்கிறது. இந்த பணிக்கு அவசியமானது இரண்டு.
1. கவனித்தல்
ஒருவர் தீமை செய்யும் போது அவரை திருத்தும் நல்லெண்ணம் கொண்ட ஒருவர் தீமை செய்பவரை நன்கு கூா்ந்து கவனிக்க வேண்டும். எந்த இடத்தில் அவரின் பலவீனம் இருக்கிறது என்பதை கவனமாகக் கண்டறிய வேண்டும். அவரின் வாழ்வில் உதவி செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை இதற்கு மிகவும் அவசியம்.
2. கற்றுக்கொடுத்தல்
எந்த இடத்தில் பலவீனம் இருக்கிறது என்பதை கண்டறிந்த பிறகு கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையாக நிதானமாக பயிற்சி கொடுக்க வேண்டும். அவரின் பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தாமல் புதிய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருக்கு மிகவும் நிதானமாக சொல்லி கொடுக்க வேண்டும். தீமை செய்பவரை கண்டிப்பாக மாற்றி நான் வெற்றி பெறுவேன் என்ற ஆர்வநிலையில் செயல்பட வேண்டும். இதற்கு தொடர் நச்சரிப்பு அவசியம். இந்த நச்சரிப்பு அவலை உறுதியாக நல்லவராக்கும்.
மனதில் கேட்க…
1. என்னுடைய நச்சரிப்பால் பலரை நல்லவராக்கலாம் அல்லவா?
2. தீமை செய்பவர்களை கண்டால் கோபம் கொள்ளாமல் அன்புடன் அவர்களை மாற்ற நான் முயற்சி எடுக்கலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும் படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1கொரி 9:22)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா