தொழுநோயாளியின் நம்பிக்கை
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4), தொழுநோயாளி, இயேசுவிடத்தில் நம்பிக்கையோடு வருவதைப் பார்க்கிறோம். இயேசு தன்னை நிச்சயம் குணப்படுத்துவார், இயேசுவிடத்தில் சென்றால், தனது துன்பத்திற்கு விடுதலை கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையோடு, இயேசுவிடத்தில் அவர் வருகிறார். பொதுவாக, தொழுநோயாளிகள் யூதப்போதர்களின் அருகில் வரமாட்டார்கள். அது தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு வருவது தெரிந்தால், மற்றவர்கள் அவர்களை கல்லால் எறிந்து விரட்டலாம். இயேசுவைப்பற்றியும், அவரது போதனை பற்றியும், ஏழைகளிடத்தில் அவர் காட்டிய இரக்ககுணம் பற்றியும், நிச்சயம் அந்த தொழுநோயாளி கேள்விப்பட்டிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையோடு தான் அவர் இயேசுவிடத்தில் வருகிறார். ஒருவேளை யாராவது கல்லெறிந்தால், அதைத்தாங்குவதற்கும் அவர் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும்.
இயேசு நிச்சயம் தன்னை வரவேற்பார், என்று அந்த தொழுநோயாளி உறுதியாக நம்பினார். தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக யூதப்பாரம்பரியத்தில் கருதப்பட்டது. ஆனால், இந்த மனிதன் இயேசுவை முழுமையாக நம்பினான். இயேசுவிடத்தில் இருக்கிற வல்லமை, நிச்சயம் தன்னை விடுதலையாக்கும் என்று அவன் நம்பினான். நிச்சயமாக, நம்பி குணமடைந்தோரின் வாழ்வை, அவன் கேட்டிருக்கக்கூடும். எனவே தான், இயேசுவிடத்தில் செல்கிறபோது, நம்பிக்கையோடு செல்ல வேண்டும் என்று, அவன் உறுதியாக இருந்தான். அந்த விசுவாசத்திற்கான பலனைப் பெற்றுக்கொண்டான்.
நாம் எவ்வளவுதான் பாவத்தின்பிடியில் சிக்குண்டு அருவருப்போடு இருந்தாலும், இயேசு நம்மை ஒருபோதும் வெறுப்பதில்லை. அவர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவுதான் குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும், நம் ஆண்டவர் குணம் தருகிற மருத்துவராக இருக்கிறார். இந்த தொழுநோயாளிடத்தில் இருந்த நம்பிக்கை மட்டும் நமக்குள்ளாக இருந்தால் போதும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்