தேவையானது ஒன்றே.. இது தெரியுமா?
லூக்கா 10:38-42
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு வழிகளில் பெறலாம்.
1. சுய பயிற்சி
நம் மனதிற்கும் உடலுக்கும் சுய பயிற்சி கொடுக்கும் போது உடலும், மனமும் நிதானமாக மாறுகிறது. சூழ்நிலைகளை சமாளிக்கிறது. காலையில் எழுந்ததும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். யோகா, தியானம் இவைகள் நம்மை பொறுமையாக வைக்கவும், நம்மை நாம் ஆட்சி செய்யவும் உதவி செய்கிறது.
2. சுய ஆய்வு
“பரிசோதித்து பார்க்காத வாழ்வு பாதுகாப்பில்லா வாழ்வு” என்கிறார்கள் சான்றோர்கள். நம் போக்கு, நம் வரத்து இவையனைத்தும் நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதை ஆய்வு செய்ய வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆய்வில் நாம் யார்? என்பதை தெளிவாக அறிக்கை வெளிப்படுத்தும். அதிலிருந்து அனுதினமும் அனுபவம் பெற்று மிகவும் பொறுமையாக பயணத்தை தொடர வேண்டும்.
மனதில் கேட்க…
1. ரொம்ப படபடப்பாக நான் அலைகிறேனா? இதை தவிர்க்க வேண்டும் அல்லவா?
2. சுய பயிற்சி, சுய ஆய்வு இரண்டையும் செய்வதில் காலம் தாழ்த்துதல் சரியில்லை தானே?
மனதில் பதிக்க…
மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே (லூக் 10:41-42)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா