தேர்வில் வெற்றியா? மதிப்பெண் என்ன?
மத்தேயு 13:18-23
காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்களை மூடும் வரை இறைவார்த்தையானது நம் உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. அது பல வடிவங்களிலே விதைக்கப்படுகிறது. திருவிவியத்தைப் படிக்கும்போதும், அருட்தந்தையர்களின் மறையுரைகளைக் கேட்கும் போதும் ஒரு சில சான்றோர்கள் நம்மோடு உறவாடும் போதும் இறைவார்த்தையானது உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்ட இறைவார்த்தையை எடுத்து அதை வாழ்ந்து காட்டுபவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவர்களின் மதிப்பெண்களையும் நாம் பார்க்கலாம்.
1. முப்பது மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சாத்தான் அவர்களிடமிருந்து எடுத்துவிடுவதால் எல்லாமே இடையிலே முடிந்துவிடுகிறது. இவர்களின் மதிப்பெண்கள் முப்பது. தோல்வியடைகிறார்கள்.
2. அறுபது மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உண்டு. ஒருசிலவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இடையில் சாத்தான் தொந்தரவு கொடுப்பதால் அவர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. இவர்களின் மதிப்பெண் அறுபது. ஏதோ தத்தி முத்தி வெற்றியடைந்து விடுகிறார்கள்.
3. நூறு மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சாத்தானை வென்று விடுகிறார்கள். ஆகவே வெற்றியடைகிறார்கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகிறார்கள். இவர்கள் தான் சாதிப்பவர்கள். இவர்கள் தான் கடவுளை நம்பினால் எப்படி வாழ்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதை நிரூபிப்பவர்கள்.
மனதில் கேட்க…
• என் மதிப்பெண் என்ன? வெற்றியா? தோல்வியா?
• நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முயற்சி எடுக்கலாமா?
மனதில் பதிக்க…
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! (திபா 119:105)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா