தேடுதலும் தங்குதலும் !
இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. “நேரமில்லை”, “பிசியாக இருக்கிறோம்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு தங்கியிருக்க முன்வருவோம்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களைவிட உம்மைத் தேடவும், உம்மோடு தங்கியிருந்து நேரம் செலவழிக்கவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.