தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியின் இயல்பைப் பற்றி நமக்கு எடுததுரைக்கின்றார். இறையாட்சி எப்படி வளர்கின்றது? மனித முயற்சிக்கு அங்கு இடமுண்டா?
இயேசு கூறுகிறார்: “நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறையத் தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது”.
ஆம், இறையாட்சி இத்தகைய விதைக்கு ஒப்பானது. இறைவனே விதைக்கிறார், இறையாட்சி தானாகவே வளர்கிறது, இறுதியில் இறைவனே இறையாட்சியை நிறைவுசெய்வார்.
அப்படியானால், நமது பங்கு என்ன? நமக்கு இறையாட்சிப் பணி என்று எதுவுமே இல்லையா? நமது பணிகளெல்லாம் வீணா? இல்லை, நமது பணிகள் அவசியம் தேவை. இருப்பினும், நமது சொந்த முயற்சியினால், உழைப்பினால் இறையாட்சி மலரப்போவதில்லை. இறைவனின் அருளே அதை நடைபெறச் செய்கிறது.
“ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்” (திபா 127:1) என்னும் திருப்பாடல் வரிகளை மனதில் கொண்டு, நமது கடமைகளை, பணிகளை நன்கு ஆற்றுவோம்.
மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய உழைப்பினால் அல்ல, இறைத் தந்தையின் திருவுளத்தின்படியே நன்மைகள் நிகழ்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, தாழ்மையான மனத்துடன் பணியாற்ற அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-பணி. குமார்ராஜா