தூய லூர்தன்னைப் பெருவிழா
இந்த விழா பிப்ரவரி 11ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது அன்னை மரியாள் பெர்னதெத் சூபிரெஸ் என்ற சிறுமிக்கு, காட்சி அளித்ததை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுகிறது. அதுவும் பிப்ரவரி 11 முதல் ஜீலை 16, 1858 வரையில் இந்த காட்சியானது, அவளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை மரியாளின் காட்சியளிப்பு என்று முதலில் கொண்டாடினர். இரண்டாம் வத்திக்கான் சங்கம் இதை தூய லூர்தன்னை நினைவு விழா என்று பெயரிட்டு, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மாற்றியமைத்தது.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிருஸ். 1858 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்கச் சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்தவேளையில் பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார். அன்னை மரியாள் அழகிய இளம்பெண்ணாக அந்தக் குகையில் தோன்றினார். வெண்ணிற ஆடையை உடுத்தியிருந்தார். முக்காடும் அணிந்திருந்தார். நீலநிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். அவரது கையில் ஒரு செபமாலையும் வைத்திருந்தார். ”நானே அமல உற்பவம்” என்று தன்னைப் பற்றிக் கூறினார். செபமாலையின் மறையுண்மைகளை தியானிக்கச் சொன்னார்.
அன்னை மரியாள் என்றும் எந்நாளும் நம்மோடு இருக்கிறாள் என்பதை, இது நமக்கு வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நமக்கு உதவுவதற்காக, நமக்காக இறைத்தந்தையிடம், அவரது அன்பு மைந்தனிடம் பரிந்துபேசுவதற்காக அவர் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார். அவரது பரிந்துரையிலும், அரவணைப்பிலும் நம்பிக்கை வைப்போம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்