தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா
ஈனோக்கு எழுதிய நூல், ஏவபடாத நூலாக பார்க்கப்படுகிறது. எனவே அது விவிலியத்தின் ஒரு நூலாக இணைக்கப்படவில்லை. அது யூதப்பாரம்பரியத்திலிருந்து வந்த நூல். ஏவப்படாத நூலாக இருந்தாலும், விவிலிய வரலாற்றுப்பிண்ணனியை அறிந்து கொள்ள அது கொஞ்சம் உதவுகிறது. கடவுளுடைய திருமுன்னிலையில் ஏராளமான வானதூதர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதன்மைத் தூதுவர்களாக ஏழு பேர் இருக்கிறார்கள் என இந்த புத்தகத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். அவர்கள், கபிரியேல், மிக்கேல், இரபேல், உரியல், இரகுவேல், ரெமியேல், செரேகுவேல். அவர்களில் முதன்மைத்தூதுவர்களாக குறிப்பிடப்படுகிறவர்கள் இன்றைக்கு நாம் திருவிழாவைச்சிறப்பிக்கிற கபிரியேல், மிக்கேல், இரபேல்.
மிக்கேல் மற்றும் கபிரியேல் தூதுவர்கள் இஸ்லாம் சமயத்திலும், யூத சமயத்திலும் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக்க விவிலியத்தில் தோபித்து புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோபித்து புத்தகத்தை “உறுதிப்படுத்தப்பட்ட” புத்தகமாக மற்ற கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், இபேலையும் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கத்திருச்சபையின் பாரம்பரியப்படி, எண்ணற்ற தூதுவர்கள் கடவுள் திருமுன்னிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, ஆர்ப்பரித்து, கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே தாழ்ச்சியோடு, மகிமையோடு கடவுளுக்கு மாட்சிமை செலுத்துவதில் நிறைவு பெறுகின்றனர்.
நமது வாழ்வும் கடவுளை மகிமைப்படுத்துவதாக வாழ்வதற்கு, இந்த திருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால், நாம் அனைவருமே கடவுளின் படைப்பாக இருக்கிறோம். நாம் கடவுளை மகிமைப்படுத்துவதுதான், நமது நிறைவான மகிழ்ச்சியாக அமையும். அதற்கான, நல்ல மனநிலையை ஆண்டவரிடம் வேண்டுவோம்.
இறைவனைக் கண்டுகொள்வோம்
நத்தனியேல் என்கிற மனிதர் தனியாளாக இருந்தாலும், அவரை இஸ்ரயேல் மக்களுக்கு ஒப்பிட்டுப்பார்த்தால், அது நமக்கு நிறைவான பொருளைத்தரும். எதற்காக நத்தனியேலை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட வேண்டும்? அது எப்படி சரியாக இருக்க முடியும்? என்ற கேள்வி நமக்குள்ளாக நிச்சயம் எழும். ஆனால், நத்தனியேலைப்பற்றி தரப்பட்டுள்ள செய்தியை நாம் பார்க்கிறபோது, அதில் இருக்கக்கூடிய உண்மையை நாம் அறிந்துகொள்ள முடியும்.
நத்தனியேல் கடவுள் அனுப்புகிற மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறவராகச் சித்தரிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் பல ஆண்டுகளாக, மெசியாவிற்காகக் காத்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற எண்ணமும், தாங்கள் சிறப்பு இனம் என்கிற சிந்தனையும் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தது. அது நத்தனியேலில் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். இயேசுவின் அற்புத ஆற்றலையும், நத்தனியேலை அவர் அறிந்தவிதத்தையும், நத்தனியேல் பார்த்தபோது, உண்மையிலே அவர்தான் கடவுள் வாக்களித்திருந்த மெசியா என்று நத்தனியேல் நினைத்தார். இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனையும், அவருடைய புதுமை செய்யும் ஆற்றலும், இஸ்ரயேல் மக்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்திருந்தன. இவ்வாறு, நத்தனியேல், இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்படுவதை நாம் நியாயப்படுத்தலாம்.
நத்தனியேல் கடவுளைக் கண்டுகொண்டார். அது போல, நடக்கும் நிகழ்ச்சிகள், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தருணங்கள், கடவுளின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்தும்போது, நத்தனியேலைப்போல நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை நத்தனியேலைப்போல ஏற்றுக்கொள்ள வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்