தூய கோலத்துடன் அவரை வழிபடுங்கள்
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இந்த திருப்பாடல்களில் (திருப்பாடல் 96: 1, 3, 4, 5, 7 – 8, 9 – 10 ) வேற்றுத்தெய்வங்களைப் பற்றிய செய்தியும் நமக்கு தரப்படுகிறது. இரண்டிற்கும் இடையேயான தொடர்பு என்ன? இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய இறைவனை மறந்து வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்தினர். அது மட்டுமல்ல, வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்துகிற அவர்கள் யாவே இறைவனையும் வணங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தூய்மையை அதிகமாக வலியுறுத்துகிறவர்கள். தூய்மையற்ற மனதோடு கடவுளுக்கு வழிபாடு செய்யக்கூடாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தனர்.
இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட மக்கள் வேற்றுத்தெய்வங்களுக்கும், யாவே இறைவனுக்கும் ஒரே நேரத்தில் ஆராதனை செலுத்துவது, வேற்று தெய்வங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அத்தாட்சி. ஒருவேளை வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்துவது தவறு என்பது தெரிந்திருந்தால், அவர்களை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனை செலுத்துவதற்கு அவர்களுடைய மனம் இடம் தந்திருக்காது. இங்கே அடுத்த தெய்வங்களையும் ஏற்றுக்கொண்டதினால், அவர்களுக்கு எந்த பாவ மனநிலையோ, குற்ற உணர்ச்சியோ இல்லை. அதைத்தான், ஆசிரியர் தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். இறைவனிடத்தில் பிரமாணிக்கமாக இருக்கவும், அவரை ஏற்று வாழவும், அவருக்கு உண்மையான தூய உள்ளத்துடன் ஆராதனை செலுத்தவும் இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.
நம்முடைய வாழ்வில் அன்பு செய்கிற இறைவனை, இரக்கம் காட்டுகிற இறைவனை, மன்னிப்பு வழங்குகிற இறைவனை நாமும் அன்பு செய்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உண்மையானவர்களாக வாழ அருள்வேண்டி மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்